போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சாதாரண பயணியாக ரயிலில் பயணித்த
சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (20) காலை மொரட்டுவையில் இருந்து கொழும்பு, கோட்டை நோக்கி பயணித்த அலுவலக ரயிலிலேயே அவர் இவ்வாறு சாதாரண பயணியாக பயணித்துள்ளார்.
எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் நடந்த இந்தப் பயணம், பயணிகளிடமிருந்து அவருக்குப் பெரும் பாராட்டுகளைப் பெற்றது. ரயில் பயணிகளும் தங்கள் பல பிரச்சினைகளை முன்வைத்துள்ளனர்.
ஆனால், தாமதங்களுக்கு நன்கு பழக்கப்பட்ட இலங்கை ரயில்வே, இன்று அமைச்சர் பயணிக்கவிருந்த ரயிலையும் தாமதப்படுத்தியே இயக்கியுள்ளது. அதனால், அமைச்சர் பயணித்த ரயில் 13 நிமிட தாமதத்திற்குப் பிறகு அதன் இலக்கை அடைந்தது.
அமைச்சர் பயணிகளுடன் உரையாடுவதையும், தொடருந்தில் பயணிகள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்து கொள்வது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இதன்போது அடிக்கடி தொடருந்து தாமதம், மின் விசிறிகள் பழுதடைதல், மாற்றுத் திறனாளிகள் தொடருந்தில் ஏறும் போது ஏற்படும் சவால்கள், தண்டவாளங்கள் மற்றும் தொடருந்து நிலையங்களில் உள்ள சுகாதாரமற்ற நிலை, தொடர்ந்து பயன்படுத்துதல் போன்றவற்றைப் பற்றி பயணிகள் கவலை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.