மன்னார் நீதிவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை காலை
இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
வழக்கொன்றுக்காக நீதிமன்றத்திற்கு வருகை தந்தவர்களை இலக்கு வைத்து இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில், படுகாயமடைந்தவர்களில் இரண்டு ஆண்கள் உயிரிழந்தனர். மன்னார், நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சவேரியன் அருள் (வயது 61) மற்றும் செல்வக்குமார் யூட் (வயது - 42) ஆகியோரே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஆண் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
உயிரிழந்த இருவரும், படுகாயமடைந்த ஆண் ஒருவரும் இன்று வியாழக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெற இருந்த வழக்கு விசாரணைகளுக்காக வருகைதந்த போதே மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றார் என்று தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மன்னார், நொச்சிக்குளம் பகுதியில் கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற இரட்டைப் படுகொலையைத் தொடர்ந்து நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வந்த நிலையில் இவர்கள் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.