யானை மனித மோதலினால் உயிரிழந்த மக்கள் மற்றும் யானைகளின் எண்ணிக்கை

தொடர்பான புள்ளி விபரங்களை மேற்கோள்காட்டி, புத்தாண்டின் ஆரம்ப தினத்தன்று சுற்றுச்சூழலை மீளமைக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்திய நிலையில், அண்மையில் சொந்த மண்ணில் இருந்து வெளியேற்றப்பட்ட யானைகள் கூட்டமொன்று அரச நிறுவனத்தினால் பட்டினியுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைப்பு ஒன்று அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட யானைகளில் ஜனாதிபதியின் பிரதேசத்தில் இருந்து துரத்தப்பட்ட காட்டு யானைகளும் இருப்பதாக வெளிப்படுத்தும் உஸ்ம (மூச்சு) அமைப்பு, "இந்த சூழ்நிலை தொடர்பில் சர்வதேச கவனம் ஈர்க்கப்பட்டால், இது சந்தேகத்திற்கு இடமின்றி வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் இந்த நாட்டில் விலங்குகள் நலன் தொடர்பில் ஒரு கரும்புள்ளியாக அமையும் என்பதோடு, இந்த நாட்டின் சுற்றுலாத் துறையிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்" என சுற்றுச்சூழல் அமைச்சரை எச்சரித்துள்ளது.

2025ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற “கிளீன் ஸ்ரீலங்கா” நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, “சுற்றுச்சூழலை மறுசீரமைப்பது, இந்த வேலைத்திட்டத்தின் பிரதான பணிகளில் ஒன்றாக கருதப்பட வேண்டும்” என்றார். சுற்றுலாத்துறையின் மேம்பாடு அதனுடன் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது என்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் யானை-மனித மோதலை குறைப்பதற்காக, ஸ்ராவஸ்திபுர, தம்புத்தேகம, விளச்சிய, மொரகொட மற்றும் தந்திரிமலை ஆகிய பகுதிகளில் இருந்து, பெண் மற்றும் குட்டிகள் உள்ளிட்ட சுமார் 150 யானகளைக் கொண்ட கூட்டத்தை வில்பத்து தேசிய பூங்காவிற்கு விரட்டும் தோல்வியுற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இன்றைய தினம் (ஜனவரி 2) உஸ்ம அமைப்பு சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெதிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒயாமடுவ தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் விவசாய பண்ணை வளாகத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக குறித்த யானைகள் சிக்கியுள்ளன.

தற்போது யானைகள் கூட்டமாக இரவு நேரத்தில் உணவு தேடி கிராமத்திற்குள் நுழைவதையோ அல்லது அதன் இயற்கையான இடம்பெயரும் பாதைகளை பின்பற்றி கரும்பு தோட்டத்திற்குள் நுழைவதையே தடுக்கும் வகையில் யானை கூட்டத்தை கரும்புத் தோட்ட வளாகத்தில் அடைத்து வைத்துள்ளதாக உஸ்ம அமைப்பின் தலைவர் கெலும் மகேஷ்  குறிப்பிட்டுள்ளார். 

மேலும், அதிக யானைகள் கூட்டமாக மிகச்சிறிய பகுதியில் நீண்ட நாட்களாக சிக்கித் தவிப்பதால் பட்டினியால் வாடுவதாகவும் குறிப்பாக குட்டிகள் இறக்கும் அபாயம் இருப்பதாகவும் அமைச்சருக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தச் சூழலைச் சமாளிப்பதற்கு, யனைகள் கரும்பு தோட்ட வளாகத்திலிருந்து இயற்கையாக இடம்பெயர்ந்து செல்வதற்கும், இடம்பெயர்வதைக் கண்காணித்து, வழியில் உள்ள சொத்துக்கள் மற்றும் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது பொருத்தமான விடயமாக அமையுமென அவர் அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

குறித்த ஆலோசனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதியின் பிரதிநிதி மற்றும் பிரதேசத்திலுள்ள ஏனைய உயர் அரச அதிகாரிகள் அக்கறை காட்டாத காரணத்தினாலேயே யானைகள் உணவின்றி சிறைப்பட நேரிட்டுள்ளதாக கெலும் மகேஷ் அக்கடிதத்தில் சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

“கிராம மக்களும், வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளும் கூட இந்த முன்மொழிவை ஏற்றுக்கொள்கிறார்கள், ஆனால் அப்பகுதிக்கு பொறுப்பான ஆளுநர், மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் போன்ற அரசாங்கத்தின் உயர் நிர்வாக அதிகாரிகள் அதை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டாமையால் யானைள், உணவின்றியும் மற்றும் கடுமையான மன அழுத்தத்துடனும் அந்த பிரதேசத்தில் சிறைபப்பட்டுள்ளன.

தயவு செய்து இது குறித்து கவனம் செலுத்தி, சிக்கிய யானைகள் கரும்பு தோட்ட வளாகத்தில் இருந்து தப்பி வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்வதற்கு தகுந்த திட்டத்தை உருவாக்கி, அதனால் மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெதியிடம் உஸ்ம அமைப்பு இறுதியாக கோரிக்கை விடுத்துள்ளது.

“தூய்மையான இலங்கை” திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, அழகிய நாடாக வெளிநாட்டவர்களாலும் போற்றப்படும் இலங்கையில் இன்று என்ன நடந்துள்ளது என கேள்வி எழுப்பியிருந்தார்.

தாய்நாட்டின் சுற்றாடலை மீளமைக்க வேண்டியதன் அவசியத்தை விளக்குவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, 2023ஆம் ஆண்டு இந்த நாட்டில் இடம்பெற்ற யானை மற்றும் மனித மரணங்களை பிரதான உதாரணமாகக் குறிப்பிட்டார்.

“சிறந்ததொரு சுற்றுச்சூழல் கட்டமைப்பு உள்ள நாட்டில் 2023ஆம் ஆண்டு யானை - மனித மோதலால் நூற்று எண்பத்திரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 2023ஆம் ஆண்டில் 484 யானைகள் மனிதர்களால் கொல்லப்பட்டுள்ளன. சிறந்த அழகியலுடன் கூடிய சுற்றுச்சூழல் கட்டமைப்பு இருந்தாலும் வருடத்திற்கு 484 யானைகள் இறக்கும் நாடாக இருக்கிறோம். யானைகளினால் 182 பேர் கொல்லப்பட்டுள்ளனர். எனவே, "சுத்தமான இலங்கை" வேலைத்திட்டத்தின் பிரதான பணிகளில் ஒன்றாக இந்தச் சுற்றுச் சூழலை மீளமைப்பது அவசியமானது” என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி