மியன்மார் புகலிடக் கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாமிற்குள்
பிரவேசித்து, அவர்களுக்கான நலன்புரி விடயங்களை பார்வையிடச் சென்ற இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் மறுக்கப்பட்டமைக்காக, அவ்வாணைக்குழுவிடம் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு விமானப்படைத் தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மியன்மாரில் இருந்து தப்பி வந்த புகலிடக் கோரிக்கையாளர்களின் தடுப்பு நிலைமை மற்றும் நலன்களை பரிசோதிக்கச் சென்ற ஒரு வைத்தியர் மற்றும் ஆணைக்குழுவின் மூத்த அதிகாரி ஆகியோரை, விமானப்படை அதிகாரிகள் தடுத்ததாக ஆணைக்குழு அண்மையில் ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தது.
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் உத்தரவிற்கமையவே, உள்ளே பிரவேசிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதென்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த விமானப்படைத் தளத்தின் பொறுப்பதிகாரி, அந்த புகலிடக் கோரிக்கையாளர்களை யாரும் அணுக அனுமதிக்கக் கூடாது என, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திடம் இருந்து உத்தரவு கிடைத்துள்ளதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளிடம் தெரிவித்தார்” என, ஆணைக்குழுவின் தலைவரும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசருமான எல்.டி.பி தெஹிதெனியா, டிசம்பர் 27ஆம் திகதியன்று ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
“ஆணைக்குழுவினால் நுழைவு அனுமதி கோரி எழுதப்பட்ட கடிதத்திற்கு, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நிலூஷா பாலசூரியவிடமிருந்து எழுத்துமூலமான பதில் கிடைக்கவில்லை.
“தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளை டிசம்பர் 31ஆம் திகதி காலை 10.30 மணிக்கு விளக்கமளிப்பதற்காக அழைத்திருந்தது. இந்நிலையில், இது விடயத்தில் ஆணையாளர் நாயகம் அது குறித்து வருத்தம் தெரிவிப்பதாக எங்களுக்குத் தெரிவித்தார்.
“முக்கியமாக இங்கு பாதுகாப்பு தேடி வந்திருக்கும் மியன்மார் அகதிகளால் ஏதாவது நோய் பரவ வாய்ப்புள்ளது என்ற காரணத்தினால் தான், எவருக்கும் அவர்களைப் பார்க்க அனுமதி வழங்கவில்லை எனவும் ஆணையாளர் குறிப்பிட்டார்.
இருப்பினும், அகதிகளை பார்வையிடச் சென்றபோது, அவ்வாறான காரணத்தை அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கவில்லை” என, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆய்வு மற்றும் கண்காணிப்புப் பிரிவின் பணிப்பாளர் நிஹால் சந்திரசிறி ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
முல்லைத்தீவு விமானப்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகளை பரிசோதனை செய்வதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு தேவையான வசதிகளை வழங்க குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் இணங்கியுள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
"ஆனால் இப்போது அவர்கள் தேவையான சுகாதார வசதிகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ளனர். எனவே, அந்த மக்களை பரிசோதிக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு தேவையான வசதிகளை வழங்க அவர்கள் ஒப்புக்கொண்டனர். அதன்படி, எதிர்காலத்தில் தேவையான பணிகளை மேற்கொள்ள எதிர்ப்பார்க்கின்றோம்.
“விமானப்படை அதிகாரிகள் மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் பிரதிநிதிகளும் தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமைக்கான காரணங்களை முன்வைக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தனர்” என்று, ஆணைக்குழுவின் தலைவர் தெஹிதெனிய குறிப்பிடுகின்றார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் இடத்தை ஆய்வு செய்வதற்கான மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களையும் ஆணைக்குழுவின் தலைவர் கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு நினைவூட்டியிருந்தார்.
"மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டத்தின்படி, நீதிமன்ற உத்தரவு அல்லது வேறு வழிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எந்தவொரு நபரையும் விசாரிக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அரசியலமைப்பின் ஊடாக அதிகாரம் காணப்படுவதோடு, எந்த இடத்திற்கும் சென்றும் ஆய்வுகளை மேற்கொள்ளவும் முடியும். இந்த அரசியலமைப்பு அதிகாரத்தின் கீழ் தான், ஆணைக்குழு அதிகாரிகள் சோதனைக்குச் சென்றனர். ஆனால், அதற்கான வாய்ப்பு கிடைக்காததால் அதற்கான காரணங்களைக் கேட்கவே இந்த பேச்சு நடத்தப்பட்டது” என்றார்.
முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 103 பேரில் நாற்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகளில் பெரும்பாலானோர் கைக்குழந்தைகள் என, மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் 12 பேர் திருகோணமலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
டிசம்பர் 19 அன்று, முல்லைத்தீவு கடற்கரையில் சிக்கித் தவித்த மியன்மார் போரில் இருந்து தப்பி வந்த 115 ரோஹிங்கியா அகதிகளை, போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு தமிழ் மீனவர்கள் குழுவால் மீட்கப்பட்டனர்.