இந்தாண்டு பணவரவு உயரும். எதிர்ப்புகள் அகலும். கடன் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்காக ஓயாமல் உழைப்பீர்கள்.

 

மேஷம்:

இந்தாண்டு பணவரவு உயரும். எதிர்ப்புகள் அகலும். கடன் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்காக ஓயாமல் உழைப்பீர்கள். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். நெடுநாளாக திட்டமிட்டபடி, இப்போது உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். மகான்கள், ஆன்மிகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்திடாதீர். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது மனம் கலங்குவீர்கள்.

எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம். திடீர் யோகம், பணவரவு உண்டாகும். வீண் செலவுகள், கடன் பிரச்சினை, திடீர் பயணங்கள், கவலைகள் வந்து செல்லும். வாகனத்தில் செல்லும்போதும் சாலையை கடக்கும்போதும் கவனம் தேவை.

ரிஷபம்:

செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். பணப் பற்றாக்குறையை சமாளித்து விடுவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லி ஆறுதல் தேட வேண்டாம். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களை திணிக்க வேண்டாம். பூர்வீகச் சொத்தை சரியாக பராமரிக்க முடியவில்லையே என வருத்தப்படுவீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். நேர்மறை எண்ணங்களை உள்மனதில் வளர்த்துக் கொள்வது நல்லது.

ஓய்வெடுக்க முடியாதபடி பணிச்சுமை இருக்கும். மஞ்சள் காமாலை, தலைச்சுற்றல், காய்ச்சல், அலர்ஜி வந்து நீங்கும். தண்ணீரை காய்ச்சி அருந்துங்கள். குடும்பத்தில் சச்சரவு வந்து விலகும். வாழ்க்கையின் மீது வெறுப்புணர்வு வந்து செல்லும். பணவரவு உண்டு. வெளிவட்டாரத்தில் புகழ், கவுரவம் வளரும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும். வெளிநாட்டிலிருக்கும் உறவினர், நண்பர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். நட்பு வட்டம் விரியும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். எதிலும் ஆர்வம் பிறக்கும். பணவரவுக்கு இனி குறைவிருக்காது.

மிதுனம்:

பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். புதிய திட்டங்கள் நிறைவேறும். வீட்டில் அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். ஷேர் மூலம் பணம் வரும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வழக்கு சாதகமாகும். வாகன விபத்துகள், காரியத் தாமதம், வீண் அலைச்சல், டென்ஷன் வந்து போகும். தாயாருக்கு கை, கால் வலி, சோர்வு வந்து நீங்கும். அவ்வப்போது மற்றவர்களைப் போல நம்மால் சுதந்திரமாக இருக்க முடியவில்லையே என வருந்துவீர்கள்.தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து நீங்கும்.

திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். தூக்கமின்மை, கனவுத் தொல்லை, ஒருவித படபடப்பு வந்து செல்லும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். ஆரோக்கியம் பாதிக்கும். பணிச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை வந்து நீங்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வழக்கில் திருப்பம் ஏற்படும். உத்தியோகத்தில் பணிச்சுமை, மறைமுக எதிர்ப்பு, ஏமாற்றம் வந்துபோகும்.

கடகம்:

எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். சேமிக்கும் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும். தம்பதிக்குள் பாசம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயமுண்டு. எதையும் திட்டமிட்டு செய்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வேற்றுமதத்தை சேர்ந்தவர்களால் உதவிகள் உண்டு. எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். தந்தைவழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். கண்ணை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

வர வேண்டிய பணம் கைக்கு வரும். புது பதவிகள் தேடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் அமைக்கும் முயற்சிகள் பலிதமாகும். வீண் செலவுகளால் சேமிப்புகள் கரையும். யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். எதிர்பாராத பயணங்கள் உண்டு. முன்கோபம், பதட்டம், சிறு சிறு ஏமாற்றம், வீண் பழி வந்து செல்லும். மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். முன்யோசனை இல்லாமல் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திட வேண்டாம்.

சிம்மம்:

விரக்தியிலிருந்து விடுபடுவீர்கள். விலகியிருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். தடைபட்ட கல்யாணம் முடியும். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். வீடு கட்டும் பணிக்கு இனி பல வழிகளிலும் உதவிகள் கிடைக்கும். சமையலறையை நவீன மயமாக்குவீர்கள். விலை உயர்ந்த ரத்தினங்கள், ஆபரணங்கள், வெள்ளிப் பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வதில் தவறில்லை.

சிறு சிறு விபத்துகள், ஏமாற்றங்கள், வீண் விரயம், இனந்தெரியாத கவலைகள் வந்துச் செல்லும். அதிகம் பேச வேண்டாம். உடல்நலனை கவனித்துக் கொள்ளவும். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. தூக்கம் குறையும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். மனைவிக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் வந்து செல்லும். வழக்கால் நெருக்கடிகள் வந்து நீங்கும். மறைமுக அவமானம் வந்து நீங்கும். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் அதிகமாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடம்பில் சத்துக்கள் குறையும். எனவே சத்தான உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.

கன்னி:

இழுபறியாக இருந்த வேலைகள் விரைந்து முடியும். மனக்குழப்பம் நீங்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கனிவான பேச்சால் காரியங்களை சாதிப்பீர்கள். தலைச்சுற்றல், தூக்கமின்மை, செரிமானக் கோளாறு, மனஇறுக்கம் வந்து செல்லும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். மனைவிக்கு உடல்நலக் குறைவு ஏற்படலாம். மனைவியுடன் இருந்த மோதல்கள் நீங்கும். திருமணத் தடைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.

சிறு சிறு அவமானம், ஏமாற்றம் வந்து நீங்கும். சட்டத்துக்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சில நேரங்களில் தர்மசங்கடமான சூழ்நிலைகளில் சிக்குவீர்கள். எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் சமாளிக்கக்கூடிய மனோபலம் உங்களுக்கு கிடைக்கும். விஐபிகளும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். ஷேர் மூலம் பணம் வரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்.

துலாம்:

திட்டவட்டமான முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்து காத்திருந்த தொகையும் கைக்கு வரும். எதிர்ப்புகள் அடங்கும். தள்ளிப் போன வழக்கில் தீர்ப்பு சாதகமாக வரும். சிலர் வீடு மாறுவீர்கள். ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்க வேண்டி வரும். எதிர்பாராத பணவரவு உண்டு. சாதாரண நிலையிலிருந்து உயர்ந்த நிலைக்கு முன்னேறுவீர்கள். தன்னம்பிக்கையுடன் பேசுவீர்கள். உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும்.நீண்ட நாட்களாக போக நினைத்த குலதெய்வம் கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள்.

பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். அவர்களின் படிப்பு விஷயமாக முக்கிய பிரமுகர்களை சந்திக்க வேண்டியிருக்கும். மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது. பூர்வீக சொத்துப் பிரச்சினை தொடர்பாக உடன் பிறந்தவர்களை கலந்து ஆலோசிக்கவும். கர்ப்பிணிகள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தாமதமாக வரும். மனதில் இனம்புரியாத கவலைகள் வந்து போகும். தன்னம்பிக்கை குறையும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். தங்க நகைகளை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம்.

விருச்சிகம்:

எதிர்பார்த்திருந்த தொகை வந்து சேரும். குடும்பத்தில் அமைதி பிறக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். அனுபவப்பூர்வமாகவும் எதார்த்தமாகவும் பேசுவீர்கள். தடைபட்ட பல காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் குழப்பங்களை ஏற்படுத்திய உறவினர்கள், நண்பர்களின் சுயரூபத்தை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். தம்பதிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்த கூடுதல் நேரம் ஒதுக்கி உழைப்பீர்கள். வேலைச்சுமை இருக்கும். வீண் பழி வரக்கூடும். தாயாருடன் வீண் விவாதம், அவருக்கு கை, கால் வலி வந்து போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் நெருக்கடிகள், இடமாற்றங்கள் வந்து செல்லும். ஓட்டுநர் உரிமத்தை சரியான நேரத்தில் புதுப்பிக்க தவறாதீர்கள். சின்னச் சின்ன அபராதத் தொகை செலுத்த வேண்டி வரும். திடீர் பயணங்கள் இருக்கும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். முக்கிய ஆவணங்களை கவனக்குறைவாக கையாள வேண்டாம். இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. வாகனம் அடிக்கடி பழுதாகும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். தாய்வழி சொத்தை விற்று புது சொத்து வாங்குவீர்கள். கெட்ட பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகி விடாதீர்கள்.

தனுசு:

பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் அதிகம் அக்கறை காட்டுவது மிகவும் நல்லது. நீங்களும் மெடிக்ளைம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றங்கள், சம்பள பிரச்சினை, மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். தாயாருக்கு முதுகு தண்டு வடத்தில் வலி, தலை சுற்றல் வந்து செல்லும். வாகனத்தை இயக்கும்போது அலைபேசியில் பேச வேண்டாம். சாலையைக் கடக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பிதுர்வழி சொத்துப் பிரச்சினை தலை தூக்கும். தந்தையாருடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும். அவருக்கு சிறு சிறு அறுவை சிகிச்சைகள், மூட்டு வலி வந்து செல்லும்.குடும்ப விஷயங்களை அடுத்தவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்.

எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண உதவி கிடைக்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டும் முயற்சிகளில் இறங்குவீர்கள். உடன் பிறந்தவர்களுடன் இணக்கமான போக்கைக் கடைபிடிக்கவும். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். பணப் பற்றாக்குறையை போக்க கூடுதலாக உழைப்பீர்கள். முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்காதீர்கள். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். சொந்த - பந்தங்களின் சுயரூபத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள்.

மகரம்:

தவிர்க்க முடியாத செலவுகளும், பயணங்களும் வரும். உறவினர், நண்பர்களின் வீட்டு விசேஷங்களை நீங்கள் முன்னின்று நடத்த வேண்டிய சூழ்நிலை வரும். உங்கள் குடும்பத்தினரைப் பற்றி மற்றவர்களிடம் குறைத்துப் பேச வேண்டாம். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தந்தைக்கு மருத்துவச் செலவுகளும், அவருடன் வீண் விவாதங்களும் வந்து போகும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து விலகும். உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை வந்து நீங்கும். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.அரசால் அனுகூலம் உண்டு. அரசியலில் செல்வாக்கு உயரும். சொத்து சேரும். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள்.

நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கல்கள், பிரச்சினைகள் ஒவ்வொன்றாக தீரும். சின்னச் சின்ன காரியங்களைக் கூட இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து விலகும். முக்கிய பிரமுகர்கள், பிரபலங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். சட்ட விதிகளை மீறி யாருக்கும் உதவ வேண்டாம். சிலர் தங்களின் ஆதாயத்துக்காக உங்களைப் பற்றிய தவறான வதந்திகளைப் பரப்புவார்கள். திட்டமிட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். இக்காலகட்டத்தில் கெடு பலன்கள் குறைந்து யோக பலன்கள் அதிகரிக்கும். இசைக் கலைஞர்களுக்கு அதிக அளவில் வாய்ப்புகள் வரும். புதுப் புது விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த வெளிநாட்டு பயணம் ஏற்பாடாகும்.

கும்பம்:

சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். வி.ஐ.பிகள் மத்தியில் பிரபலமாக பேசப்படுவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். வருங் காலத்துக்காக சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நவீன ரக வாகனம் மற்றும் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். எதிலும் பிடிப்பற்ற போக்கு, பிறர் மீது நம்பிக்கையின்மை, வீண் விரயம் வந்து செல்லும். சாதாரணமாகப் பேச போய் சண்டையில் முடியும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். பழைய கடன் பிரச்சினை அவ்வப்போது மனதை வாட்டும். எதிலும் ஒருவித பயம், படபடப்பு, ஒற்றைத் தலை வலி, செரிமானக் கோளாறு வந்து செல்லும். வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலிக்கும். யாரை நம்புவது என்கிற மனக் குழப்பத்துக்கு ஆளாவீர்கள். கணவன் - மனைவிக்குள் வரும் சின்ன சின்ன பிரச்சினை களை பெரிதுப்படுத்திக் கொண்டி ருக்காதீர்கள்.

வீண் சந்தேகத்தை விலக்கி கொள்ளுங்கள். ஈகோவை தவிர்க்கப் பாருங்கள். பழைய பிரச்சினைகள் தலை தூக்கும். கணவன் - மனைவிக்குள் அனுசரித்துச் செல்லவும். விட்டுக் கொடுப்பதால் நன்மை உண்டு. நெருங்கிய நண்பர்கள், உறவினர்களாக இருந்தாலும் யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். யாரையும் நம்பி எந்த முடிவும் எடுக்காதீர்கள். பணம் கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கையாக இருங்கள். சிறு சிறு விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

மீனம்:

கடின உழைப்பால் சாதிப்பீர்கள். மனப்போராட்டங்கள் ஓயும். சமயோஜிதமான பேச்சால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த பணம் கைக்கு வரும். பழைய கடனை எவ்வாறு அடைக்கப் போகிறோமோ என்று முழி பிதுங்கி நின்ற நிலை மாறும். இனி அதற்கான வழி வகைகள் கிட்டும். பிள்ளைகளிடம் அவ்வப்போது ஏற்பட்ட கோபநிலை மாறி இனி அனைவரையும் அரவணைத்துப் போவீர்கள். தள்ளிக் கொண்டே போன மகனின் திருமணம் இப்போது கூடி வரும்.

மூச்சுத் திணறல், அல்சர், ரத்த சோகை வந்து செல்லும். கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். மனைவி உணர்ச்சி வசப்பட்டு பேசினால் அதைப் பெரிதுப்படுத்திக் கொண்டு பதிலுக்கு பதில், ஏட்டிக்கு போட்டியாக ஏதாவது சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளைப் பார்க்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகும். தாயாருக்கு முதுகு, மூட்டு வலி, சிறு சிறு அறுவை சிகிச்சைகள் வந்து செல்லும்.

தாயார், அம்மான், அத்தை வழியில் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். சொத்து வாங்கும்போது சட்ட நிபுணர்களை கலந்தாலோசித்து தாய் பத்திரம், வில்லங்க சான்றிதழ் போன்றவற்றை சரி பார்த்து வாங்குங்கள். வீண் விரயம், விரக்தி, ஏமாற்றம், காரியத் தடை வந்து நீங்கும். வறட்டு கவுரவத்துக்கும், போலி புகழ்ச்சிக்கும் மயங்காதீர்கள்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி