அடுத்து நடக்கவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களின் போது,
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பாகவே அக்கட்சியினர் போட்டியிடுவார்கள் என்று, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட புதிய ஜனநாயக முன்னணியின் கூட்டணி தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் துமிந்த திஸாநாயக்க கூறுகையில், “ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தற்போது தனிக் கட்சியாக மாறியுள்ளது. உள்ளூராட்சி சபை அல்லது மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாகவே எமது தரப்பினர் போட்டியிடுவார்கள். சுதந்திரக் கட்சிக்கும், புதிய ஜனநாயக முன்னணிக்கும் இடையிலான கூட்டணியும் முடிவுக்கு வந்துள்ளது” என்றார்.