இருபது ஆண்டுகளுக்கு முன்பு, டிசம்பர் 26 அன்று சுமத்ராவுக்கு மேற்கே, 9.1 ரிச்டர் அளவிலான
நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுவே, இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாகும். இது, இந்தோனேசியாவின் கடற்கரையையும் இந்தியப் பெருங்கடலையும் சுற்றியுள்ள மக்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் பாரிய சுனாமியை ஏற்படுத்தியது.
இந்தியப் பெருங்கடல், சுனாமி மற்றும் கிறிஸ்மஸ் சுனாமி என்று அழைக்கப்படும் சுனாமி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 9,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட கிட்டத்தட்ட 230,000 பேரைக் கொன்றதாக, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 14 நாடுகளில் இருந்து இறப்புகள் பதிவாகியுள்ளன.
சுனாமி மதிப்பீட்டுக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, குறைந்தது 275,000 பேர் கொல்லப்பட்டனர் என்பதுடன், மேலும் பலரைக் காணவில்லை என பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த கொடிய சுனாமியின் எச்சரிக்கை அறிகுறிகளில் ஒன்று, கடற்கரையை ஒட்டிய கடல் பின்வாங்கி, நூற்றுக்கணக்கான மீட்டர் கடற்கரை மற்றும் கடற்பரப்பை வெளிப்படுத்தியதாகும்.
நிலநடுக்கம் ஏற்பட்ட 30 நிமிடங்களுக்குள், வடக்கு சுமத்ரா மற்றும் இந்தியாவின் நிக்கோபார் தீவுகளின் கடற்கரையில் பாரிய அலைகள் மோதத் தொடங்கின.
இரண்டு மணி நேரத்திற்குள் பாரிய அலைகள், தென்னிந்தியா, இலங்கை மற்றும் தாய்லாந்தை அடைந்தன, ஏழு மணி நேரத்திற்குள் அவை 'ஹார்ன் ஆஃப் ஆப்ரிக்கா'வையும் தாக்கின.
இந்தப் பேரழிவின் பொருளாதார தாக்கம், சுமார் 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சுனாமி என்பது இரட்டை வேர் கொண்ட ஜப்பானிய வார்த்தையாகும், tsu என்றால் துறைமுகம் மற்றும் nami என்றால் அலை.
நிலநடுக்கத்தின் ஆற்றல், கடலின் அடிப்பகுதியை பல மீட்டர்கள் செங்குத்தாக இடமாற்றம் செய்து, நூற்றுக்கணக்கான கன கிலோமீட்டர் நீரை நகர்த்தும்போது சுனாமி உருவாகிறது.
ஐக்கிய நாடுகள் சபை, சுனாமியை விவரிக்கிறது. "பெரும்பாலும் நீர் சுவர்களைப் போல தோற்றமளிக்கும் அலைகள், கடற்கரையோரங்களில் மோதி சில மணிநேரங்களில் ஆபத்தை விளைவிக்கும்.”
முதல் அலை எப்போதும் மிகப்பெரிய அலையாக இருக்காது. 2004 இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி அலை, இரண்டாவது பெரியாகும். 1964இல் அலஸ்காவில் ஏற்பட்ட சுனாமி அலை, நான்காவது பெரிய அலையாக இருந்தது. .
நிலநடுக்கம், நிலச்சரிவு அல்லது எரிமலை வெடிப்பு போன்றவற்றால் சுனாமி ஏற்படலாம்.
22,000க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற சான்ரிகு சுனாமியைத் தொடர்ந்து, நில அதிர்வு நடவடிக்கைகளுக்கும் சுனாமிகளுக்கும் இடையிலான தொடர்பை 1896ஆம் ஆண்டில் ஜப்பானியர்கள் தான் முதலில் முன்வைத்தனர்.
1923ஆம் ஆண்டில், மற்ற நாடுகள் சுனாமி எச்சரிக்கைகளை வெளியிடும் திறனைப் பெறுவதற்கு முன்பு, நில அதிர்வு நிபுணரும் ஹவாய் எரிமலை ஆய்வகத்தின் நிறுவனருமான தாமஸ் ஜாகர், கிழக்கு ரஷ்யாவில் கம்சட்கா பூகம்பத்திற்குப் பிறகு சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைக் குறிப்பிட்ட முதல் விஞ்ஞானியாவார்.
1941ஆம் ஆண்டில், உலகின் முதல் சுனாமி முன்னெச்சரிக்கை அமைப்பு, ஜப்பானின் சென்டாய் நகரில் நிறுவப்பட்டது.
அமெரிக்க அரசாங்கத்தின் முதல் சுனாமி எச்சரிக்கை மையம், 1949இல் ஹொனலுலு புவி காந்த ஆய்வகத்தில் நிறுவப்பட்டது. இது, பின்னர் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தின் முக்கிய பகுதியாக மாறியது.
ஆனால், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில், 2004இல் எந்த எச்சரிக்கை அமைப்பும் இல்லை அல்லது பாதிக்கப்படக்கூடிய கடலோர மக்களைத் தெரிவிக்கவும் மற்றும் வெளியேற்றும் வழிமுறைகளும் இருக்கவில்லை.
28 நாடுகளின் பங்கேற்புடன், 2005இல் நிறுவப்பட்ட இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மற்றும் தணிப்பு அமைப்பு, 2011இல் செயல்பாட்டுக்கு வந்தது.
பிராந்தியத்தில் உள்ள பல நாடுகள், தங்கள் சொந்த சுனாமி எச்சரிக்கை அமைப்புகளையும் இயக்குகின்றன.