மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில்
251 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்தோடு, குறித்த 251 பேர் உள்ளடங்களாக போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக, மொத்தமாக 8,747 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, பண்டிகைக் காலங்களில் இணையம் ஊடான பண மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக, இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
சில பரிசுகளை வென்றதாக கூறி வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து, இந்தப் பண மோசடி செய்ததாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, அதன் பிரதம தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்தார்.
AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சில முறைகேடுகள் நடப்பதாக முறைப்பாடுகள் பதிவாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான அழைப்புகள் மற்றும் சம்பவங்களில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு பொதுமக்கள் விசேட அவதானம் செலுத்த வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.