உள்ளூராட்சிமன்றத் தேர்தலை அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டிருந்தாலும்,
சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் அதனை நடத்துவது சாத்தியமற்றது என, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,
“சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஊடகங்களுக்கு குறிப்பிட்டிருந்தார். ஜனாதிபதி குறிப்பிடுவதை போன்று வெகுவிரைவாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதாக இருந்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களை முதலில் இரத்துச் செய்ய வேண்டும்.
“ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களுக்கு அமைய உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதில் சிக்கல் காணப்படுவதை ஏற்றுக்கொள்ள வேண்டும். புதிதாக வேட்புமனு கோருமாறு அரசியல் கட்சிகள் உட்பட பல தரப்பினர் வலியுறுத்தியதற்கமைய, வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு கடந்த 03ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
“வேட்புமனுக்களை இரத்துச் செய்யும் வகையிலான சட்ட வரைவு விரைவாக தயாரிக்கப்பட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டு முதல் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமப்பிக்கப்பட்டதன் பின்னர், அந்த சட்டமூலத்தை உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவதற்கு 14 நாட்கள் காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும்.
“நீதிமன்றத்தின் வியாக்கியானத்துக்கு பின்னர் இந்த சட்டமூலத்தை பெப்ரவரி மாதம் நிறைவேற்றிய மறுதினமே தேர்தலை நடத்த முடியாது. தேர்தல் பணிகளை முன்னெடுக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு போதுமான காலவகாசம் வழங்க வேண்டும்.
“சட்ட திருத்தத்தை நிறைவேற்றி, தேர்தல் பணிகளை விரைவாக முன்னெடுத்தாலும், சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவது சாத்தியமற்றது. ஏனெனில் மார்ச் - ஏப்ரல் வரையான காலப்பகுதியில் சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ளது. ஆகவே, 2025ஆம் ஆண்டு மே மாதமளவில் தேர்தலை நடத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.