எதிர்வரும் ஆண்டுக்கான இலங்கையின் வரவு செலவுத் திட்டம் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்படாது
என்று தெரிவித்த முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட, மாறாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆவணத்தையே அரசாங்கம் வரவு செலவுத் திட்டமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதெனத் தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்காக, முன்னிலை சோசலிசக் கட்சி ஜனாதிபதியிடம் சமர்ப்பித்த பிரேரணை தொடர்பில் இன்று (20) நுகேகொடையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“2025ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம், எதிர்வரும் காலங்களில் வரவுள்ளது என்பதை நாம் அறிவோம். தற்போதைய செய்திகளின்படி, பிப்ரவரி 17-ம் திகதியன்று பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். முன்னிலை சோசலிச கட்சி என்ற வகையில், இந்த வரவு செலவு திட்டம் தொடர்பான பிரேரணையை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க உள்ளோம். இந்த அரசாங்கம், தற்போது இடைக்கால நிலையான கணக்கை பல மாதங்களாக ஏற்றுக்கொண்டுள்ளது. வரவு செலவுத் திட்டம் எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. ஆனால், ஜனாதிபதி டிசம்பர் 18ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு வந்து விசேட உரை நிகழ்த்தினார். இந்த கதை, ஒரு பட்ஜெட் கதையின் சுருக்கம் போன்றது. ஜனாதிபதி ஏன் இவ்வாறு திடீர் உரை நிகழ்த்தினார் என்பதே எமக்கு உள்ள பிரச்சினை.
“அந்த உரையில், சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து ஜனாதிபதி பேசினார். வரிகளை குறைக்க ஒப்புக்கொள்ளப்பட்ட பகுதிகள், வரிகள் அதிகரிக்கப்படும் பகுதிகள், எதிர்காலத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்து இங்கு விவாதிக்கப்பட்டது. அப்படியானால், எதிர்வரும் ஆண்டுக்கான இலங்கையின் வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பது அரசாங்கம் அல்ல என்பது எமக்குத் தெளிவாகத் தெரிகிறது. சர்வதேச நாணய நிதியம் வழங்கிய ஆவணம் வரவு செலவுத் திட்டமாக பாராளுமன்றத்திற்கு வரவுள்ளது” என்று, புபுது கூறினார்.