காலி – தடுல்ல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில்,
பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மெலேகொட – வன்ஷாவல பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய லொக்கா என்றழைக்கப்படும் பட்டபெந்திகே பெத்தும் என்பவரே உயிரிழந்துள்ளார். அவரது மனைவி காயமடைந்த நிலையில், கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விருவரும், காலியிலிருந்து கொழும்பு நோக்கி, மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருக்கும் போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, களுத்துறையில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹோட்டலின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் வெளியாட்கள் குழுவிற்கும் இடையில் ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்தும் நோக்கில், ஹோட்டலின் அதிகாரி ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக, களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
சுற்றுலா விடுதிக்கு முன்பாக உள்ள கடற்கரையில் இளைஞர்கள் குழுவொன்று மதுபானம் அருந்துவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், ஹோட்டலின் பாதுகாப்பு அதிகாரிகளுடன் மோதலை ஏற்படுத்த முயற்சித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். மேலும், சம்பவத்தை கட்டுப்படுத்த சம்பவ இடத்தில் தங்கியிருந்த ஹோட்டலின் உயர்மட்ட நிர்வாக அதிகாரி ஒருவர், தனது பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட துப்பாக்கியால், வானத்தை நோக்கிச் சுட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், இளைஞர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.