எதிர்வரும் சிங்கள - தமிழ்ப் புத்தாண்டுக்கு முன்னதாக உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்படும் என,
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதற்கான வேட்புமனுக்களை மீள அழைப்பது தொடர்பான சட்டமூலம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்கத் தேரர்களை இன்று (20) பிற்பகல் தரிசனம் செய்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, "2023 மார்ச்சில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்த வேட்புமனுக்கள் கோரப்பட்டன. ஆனால், அப்போது இருந்த கட்சிகள் இன்று இல்லை. சில கூட்டணிகள் உடைந்துள்ளன. எனவே, அந்த வேட்புமனுக்களை இரத்து செய்துவிட்டு, புதிய வேட்புமனுக்களைக் கோரவேண்டும் என்று நினைக்கிறோம்” என்றார்.
“சமீபத்தில் அமைச்சரவையில் முடிவு செய்து, வேட்புமனு இரத்து தொடர்பான சட்டமூலத்தைத் தயாரித்துள்ளோம். இது, ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அதன்பிறகு, மீண்டும் வேட்புமனுத தாக்கல் செய்யப்பட்டு, உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை, புத்தாண்டுக்கு தயார் செய்வோம்” என்றார்.