எமது நாட்டின் அரச சேவையை முறையான அரசாங்கப் பொறிமுறையாக மாற்றும் சவால் எம் முன் உள்ளதாக,
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
எமது நாட்டில் தற்போதுள்ள அரச நிறுவனங்களை மீள் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள புதிய குழு, அரசியல் செல்வாக்கு எதுவாக இருந்தாலும், உரிய தீர்மானங்களை மேற்கொள்ளும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நாரஹேன்பிட்டியில் உள்ள 'நில மெதுர' கட்டிடத்தில் உள்ள உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில், இன்று (20) நடைபெற்ற மாவட்டச் செயலாளர்/ இராஜதந்திர மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரச முகவர் முதல் மாவட்டச் செயலர் என பட்டங்களை மாற்றிய இந்த சேவை, சுமார் 200 ஆண்டுகள் பழமையானது என்றும் நமது நாட்டை புதிய திசையில் கொண்டுசெல்வதில் பெரும் பங்கு உள்ளது என்றும், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.
இறுதி இலக்கு மற்றும் நோக்கம் தொடர்பிலான தற்போதைய நிலைமை திருப்திகரமாக இல்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, அரச நிறுவனமொன்றின் நியாயமான சேவையைப் பெற்றுக்கொள்வதில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும், ஒரு அரசு என்ற வகையில், முழு அமைப்பும் சீர்குலைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அவ்வாறு சீர்குலைந்துள்ள அமைப்பை மீள உருவாக்குவதற்கு நாம் தயாரா இல்லையா என்பதை எம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும் என, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.