முன்னாள் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்க்ஷவின் பாதுகாப்புக்காக வருடாந்தம் 32 கோடி ரூபாவுக்கும் மேல் செலவிடப்படுவதாக பொலிஸ் தலைமையக ஊடகப்பிரிவு தெளிவித்துள்ளது
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களின் வருடாந்த செலவு 1,100 மில்லியன் ரூபாவாகும் என அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தமது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
உயரடுக்கு பாதுகாப்புக்கான அதிகாரிகளை நியமிப்பது தொடர்பில் செயற்படுவதற்கு தற்போதைய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழு, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கைகள் மற்றும் இலங்கை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட செலவினங்களை மீளாய்வு செய்துள்ளது.
இதன்படி, மஹிந்த ராஜபக்க்ஷ உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை 60 ஆக மாற்றியமைத்து பராமரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இலங்கை பொலிஸ் சேவையில் 24,000 உத்தியோகத்தர்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதாகவும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு மற்றும் பிரதமரின் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்புப் பணிகளில் 2,000 அதிகாரிகள் இதற்கு முன்னர் கடமையாற்றியதாகவும் பொலிஸ் தலைமையகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் பாதுகாப்புக்காக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவதால் அவரின் பாதுகாப்பில. எவ்வித குறைபாடுகளும் ஏற்படவில்லை எனவும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.