மட்டக்களப்பு, மண்முனை
தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட தாந்தாமலை கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள காட்டுப் பகுதியில் கிராம உத்தியோகத்தர்கள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையால் விற்பனைக்கு தயாராக இருந்த
மூன்று கொள்கலன் சட்டவிரோத கசிப்பு புதன்கிழமை (11) கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
கிராம மக்கள் மூலம் தாந்தாமலையை அண்டிய கிராமப் பிரிவுகளில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைவாக, காட்டுப் பகுதியில் மேற்கொண்ட தேடுதலில் 12000 மில்லி லீட்டர் அடங்கிய சட்டவிரோத கசிப்பு 3 கொள்கலன்களில் இருந்து கைப்பற்றப்பட்டது.

இந் நடவடிக்கையினை கிராம உத்தியோகத்தர்கள் மிகவும் துணிச்சலான முறையில் முன்னெடுத்துள்ளனர்.
1963 ம் ஆண்டு பெப்ரவரி 22ம் திகதிய வர்த்தமானிக்கு வெளியீட்டுக்கு அமைவாக, மதுவரி கட்டளைச் சட்டம் 33,35 மற்றும் 48 அ பிரிவின் சட்டத்தின் படி கிராம உத்தியோகத்தர்களால் இப்பணி மேற்கொள்ளப்பட்டதாக இந்நடவடிக்கையில் ஈடுபட்ட கிராம உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தின்போது, சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும், கைப்பற்றப்பட்ட கசிப்பு யாவும் அவ்விடத்தில் அழிக்கப்பட்டதாகவும் கிராம உத்தியோகத்தர்கள் மேலும் தெரிவித்தனர்.