தற்போதைய அரசாங்கம் மக்கள்
ஆணையைப் பெற்று, நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் இந்த அரசாங்கம் மக்கள் ஆணையை மீறி மக்களின் உரிமைகளுக்கு துரோகம் இழைத்துள்ளது. ஏலவே எட்டியிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டை அவ்வாறே தொடர்வதானது அண்மைக் காலத்தில் நடந்த மிகப் பெரிய துரோகம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எனவே இந்த இணக்கப்பாட்டில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். முன்னைய அரசாங்கத்தின் பிரேரணையின் பிரகாரம் டிசம்பர் 12 ஆம் திகதி பாராளுமன்றம் கூட்டப்பட்டு, இந்த இணக்கப்பாடு பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் போது எதிர்க்கட்சி இதற்கு ஆதரவு வழங்க தயார். நமது நாடு கானாவைப் போல் செயல்பட வேண்டும். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பாராமல் இதற்கு உதவ தயாராக உள்ளோம். ஒரு நாடாக கானா சென்ற வழியில் நாமும் செல்ல வேண்டும். தற்போதுள்ள இணக்கப்பாடு நிறைவேற்றப்பட்டால், பாதகமான கடன் சுழற்சியில் சிக்குண்டு அதன் பங்குதாரர்களாக மாறி, பல தசாப்தங்களாக கடன் சுமையில் தவிக்கும் நாடாக மாறுவோம். ஆகையால், எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னர் இணக்கப்பாட்டினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாடு தொடர்பில் இன்று (06) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
“வளமான நாடு-அழகான வாழ்க்கை” தேர்தல் விஞ்ஞாபனத்தில் பக்கம் 105 இன் படி, மாற்று கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வு மூலம் திசைகாட்டி அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டும் இணக்கப்பாட்டை தொடர்ந்து முன்னெடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முறைமையின் மூலமா அல்லது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் பின்பற்றிய வழிமுறைமையின் ஊடாகவா அண்மையில் இணக்கப்பாடு எட்டப்பட்டது என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேள்வி எழுப்பினார்.
வளமான நாடு-அழகான வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கான பயணம் தற்போதுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் தொடருமானால், பயணம் வீழ்ச்சியடையும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
? தற்போதுள்ள IMF இணக்கப்பாட்டின் மூலம் நாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்த வேண்டாம்.
IMF இன் மார்ச் 2023 அறிக்கையில், 2033 இல் இருந்து கடன் திருப்பிச் செலுத்துதலை ஆரம்பிக்குமாறு அழைப்பு விடுத்திருந்தது. திருத்தங்களை மேற்கொள்ளாது ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய இணக்கப்பாட்டின் மூலமும், 2028 இல் கடன் செலுத்தும் பணியையே மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது. இன்னும் 4 வருடங்களில் கடனை திருப்பிச் செலுத்தும் வகையில் வலுவான பொருளாதாரத்தை கட்டமைப்பதற்கு எந்த அரசாங்கத்தாலும் முடியாது போயுள்ளது. இந்த இணக்கப்பாட்டின் மூலம் நாட்டை ஆபத்தில் ஆழ்தியுள்ளனர். தற்போதைய அரசாங்கமும் ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதியின் அடிச்சுவடுகளையே பின்பற்றி வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
இந்த அரசாங்கம் IMF அறிக்கைகளை ஆராயாமல் உடன்பட்டு, நீட்டிக்கப்பட்ட கடன் வசதிகளைப் பெறுவதற்காக மட்டுமே செயல்படுவது ஆபத்தான சூழ்நிலையாகும். தற்போதுள்ள இணக்கப்பாடு பலவீனமானது, இதற்கு அப்பால் சென்று, திருத்தங்களை மேற்கொண்டு புதிய இணக்கப்பாட்டை எட்ட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நமது நாட்டில் பிணை முறி பத்திர கொடுக்கல் வாங்கல்கள் ஒப்பந்தத்தில் தலையிட்ட அதே நிறுவனமே கானாவில் கடன் வெட்டிலும் தலையிட்டது. செலுத்த வேண்டிய கடனில் 37% வெட்டப்பட்டது. அதேபோல் 6% வட்டி விகிதத்துக்கு கானா இணக்கப்பாட்டையும் எட்டியது. இதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒன்றே இங்கு நடக்கிறது.
2025-2028 ஆம் ஆண்டில் நமது நாட்டின் சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி 107 பில்லியனாக இருக்கும் என்று கருதினால், தற்போதுள்ள கடனை விட 2.3 பில்லியன் அதிகமாக கடனை செலுத்த வேண்டி வரும். அவ்வாறே 2028 முதல் வட்டி விகிதம் 6.8% ஆகவும், 2032 க்கு மேல் வட்டி விகிதம் 9.65% ஆகவும் அமைந்திருக்கும்.
கானா இந்த முன்மொழிவுகளை நிராகரித்து சிறந்ததொரு இணக்கப்பாட்டை எட்ட முடியுமாக இருந்தால், எம்மாலும் அது முடியும். தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில் எங்களால் கடன் வெட்டை எட்ட முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.