எதிர்வரும் 9, 10, 11, 12 ஆகிய
திகதிகளில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க இன்று (05) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை விளக்கினார்.
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் தெற்கு அந்தமான் தீவுகளுக்கு அருகே மீண்டும் ஒரு குழப்பநிலை உருவாகியுள்ளதால், அதன் தாக்கம் குறித்து தெரிவிக்கும் வானிலை முன்னறிவிப்புகளில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் மேலும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
"தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு அந்தமான் தீவுகளுக்கு அருகே மீண்டும் ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளதாக எங்கள் பகுப்பாய்வு காட்டுகிறது. இது ஒரு புயலா அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டலமா என்பதை உடனடியாக கூற முடியாது. இது வங்காள விரிகுடாவில் இருந்து வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை நாம் காணலாம்.
இந்த அமைப்பு கிழக்கு கரையோரப் பகுதியிலிருந்து விலகிச் செல்வதால், வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவாவில் சராசரி மழையளவு அதிகரிப்பதன் காரணமாக 9, 10, 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் மறைமுக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
இது எதிர்காலத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகுமா இல்லையா என்பதை உறுதி செய்வோம் என்றார்.