மதுரங்குளிய, ரெட்பானாவத்த
பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட குழப்பத்தை கட்டுப்படுத்த, பொலிஸார் தரையை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
அண்மைக்காலமாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக குறித்த பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனியார் காணி ஒன்றின் குறுக்கே காணப்படும் வடிகாலை சுத்தம் செய்வதற்காக பிரதேசவாசிகள் குழுவொன்று குறித்த இடத்துக்குச் சென்றுள்ளனர். ஆனால் அதற்கு காணி உரிமையாளர் அனுமதி வழங்கவில்லை.
இதனால், இரு தரப்பினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த மதுரங்குளிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று சம்பவ இடத்துக்கு சென்றது.
அதன் பின்னர் முந்தல் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றும் ஸ்தலத்துக்கு வரவழைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் அதிகாரிகள் வந்ததும், சம்பந்தப்பட்ட குழுவினர் அங்கிருந்து தப்பிச் சென்றது.
இதன்போது மூன்று உழவு இயந்திரங்கள், இரும்புக் குழாய்கள், கட்டைகள் மற்றும் மரக்கட்டைகள் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.