தமிழீழ விடுதலைப் புலிகளின்
மாவீரர் நினைவேந்தல் தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு நாட்டுக்குள் மற்றும் நாடுகளுக்கு இடையில் நெருக்கடியை ஏற்படுத்த முயன்றதாகக் கூறப்படும் கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த ஹர்ஷன என்ற நபரை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று (02) உத்தரவிட்டுள்ளார்.
இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் சிறைச்சாலை அதிகாரியினால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சந்தேக நபரின் முகநூல் கணக்கில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்கள், மாவீரர் தொடர்பான புகைப்படங்களைப் பதிவிடப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்தனர்.
நாட்டில் நெருக்கடி மற்றும் நாடுகளுக்கு இடையில் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் விடயங்களை சமூகவலை தளத்தில் வெளியிட்டமைக்காக சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறும், சந்தேக நபருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டது.
சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மனோஜ் கமகே, தடைசெய்யப்பட்ட அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் தமது கட்சிக்காரர் செயற்படவில்லை என நீதிமன்றில் தெரிவித்தார்.
இரு தரப்பினரின் உண்மைகளையும் கருத்திற் கொண்ட பிரதான நீதவான், மேலதிக விசாரணைகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பணிப்புரை வழங்கியதுடன் சந்தேக நபரை இரு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.