2019ஆம் ஆண்டு இடம்பெற்ற
சர்ச்சைக்குரிய 'வெள்ளை வேன்' செய்தியாளர் சந்திப்பு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட இருவரை கொழும்பு மேல் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
செப்டம்பர் 12, 2022 அன்று ராஜித சேனாரத்ன மற்றும் முன்னாள் அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் (SPC) தலைவர் ரூமி மொஹமட் அஸீம் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் குற்றமற்றவர்கள் என ஒப்புவிக்கப்பட்டுள்ளது.
2019 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், அந்தனி டக்ளஸ் பெர்னாண்டோ மற்றும் அதுல சஞ்சீவ மதநாயக்க ஆகிய இரு நபர்கள் பல குற்றச்சாட்டுகளைமுன்வைத்தனர்.
பெர்னாண்டோ, தான் கடத்தல்களில் ஈடுபட்ட "வெள்ளை வேன்" சாரதியாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டினார், அதே சமயம் மதநாயக்க புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து தங்கத்தை கொண்டு சென்றதாகக் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் ஆட்சிக் காலத்தில் கடத்தல்கள், படுகொலைகள், கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த அறிக்கைகள் சர்ச்சையை ஏற்படுத்தின.
சுகாதார அமைச்சராக கடமையாற்றிய ராஜித சேனாரத்ன, ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தமைக்காக கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பிணையில் செல்லக்கூடிய குற்றங்கள் என நீதிமன்றம் அவதானித்த பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.