சட்டவிரோதமாக அசெம்பிள்
(தயாரிக்கப்பட்ட) செய்யப்பட்ட சொகுசு BMW கார் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தின் சந்தேக நபரான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழு நேற்று (22) கொழும்பில் இருந்து குருணாகலுக்கு சென்றுள்ளது.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யாது வரி ஏய்ப்புச் செய்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, சட்டவிரோதமான முறையில் அசெம்பிள் செய்து வாகனத்தைப் பயன்படுத்தியமை, போலி இலக்கத் தகட்டைப் பொருத்தியமை மற்றும் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் மறைத்து வைக்குமாறு உத்தரவிட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ள உண்மைகளின்படி, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ என்ற சந்தேக நபர் இலங்கை தண்டனைச் சட்டம் மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களைச் செய்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கோட்டை நீதிவானிடம் தெரிவித்துள்ளனர்.