வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் கோயில் பூசகர் மதிமுகராசா கைது செய்யப்பட்டுள்ளார். இன்றைய தினம் சிவராத்திரி

விழாவுக்கான ஏற்பாடுகளை செய்வதற்காக கோயில் வளாகத்துக்குச் சென்றிருந்த போது, பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் கோயில் சிவராத்திரி விழா ஒழுங்குபடுத்தல்களுக்கு சென்ற பூசகரையும் சிவராத்திரி விழாத் தேவைகளுக்காக எடுத்துச்செல்லப்பட்ட தோரணங்கள், வாழை மரங்கள், தண்ணீர் பெளசர் போன்றவற்றையும் பொலிஸார் தடுத்துவைத்திருந்தனர்.

பின்னர் ஒழுங்குபடுத்தல்களுக்கு சென்றவர்களின் தேசிய அடையாள அட்டைகள், சாரதி அனுமதி பத்திரங்கள், தொலைபேசிகள் போன்றனவும் பொலிஸாரால்  பறிக்கப்பட்டிருந்தன. இந்தநிலையிலேயே பூசகர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று, கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் கோயில் மகா சிவராத்திரி பூசை ஏற்பாடுகளுக்கு சென்ற பூசகர் சிவத்திரு மதிமுகராசாவை கைது செய்தமை மிகப் பாரதூரமான சைவத்தமிழர்களின் அடிப்படை வழிபாட்டுரிமையை மீறும் செயல் என, அகில இலங்கை சைவ மகாசபை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இன்று சிவராத்திரி விழா அனுட்டிக்கப்படும் நிலையில், அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோவிலுக்கு சென்ற பூசகர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பில் அகில இலங்கை சைவ மகா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

“உலகம் பூராகவும் உள்ள சைவர்களின் மிக உன்னதமான முதன்மையான விரதம் சிவராத்திரி ஆகும். அந்த வகையில், வன்னி சிவப் பிராந்தியத்தில் வவுனியா மாவட்டத்தில் உள்ள தொன்று தொட்டு தமிழ்ச் சைவர்கள் வழிபட்டு வரும் ஆதி சிவன் கோயிலின் மகா சிவராத்திரி வழிபாடுகளுக்கு சென்ற பூசகர் மிக மோசமான முறையில் கைது செய்யப்பட்டமையையும் பக்தர்களின் வழிபாடுகளிற்கு கோயில் பரிபாலன சபையினரின் பூசை ஏற்பாடுகளுக்கு பலத்த இடையூறு விளைவிக்கப்பட்டு, துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டமை சைவசமயிக்கு தாங்கொணாத வலியை ஏற்படுத்தியுள்ளது.

“இது, இலங்கையின் சைவசமயிகளின் வழிபாட்டு உரிமைக்கு விடுக்கப்பட்ட பாரிய அச்சுறுத்தலும் அதேநேரம், சைவ சமய மதகுருவை மோசமாக நடத்தி கைது செய்தமை மன்னிக்க முடியாத பாரதூரமான சம்பவமுமாகும்.

“உடனடியாக பூசகர் சிவத்திரு மதிமுகராசாவை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துவதுடன், நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி தன்னிச்சையாக செயற்பட்ட நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸார் மீது அரசு உரிய ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தி நிற்கின்றோம்.

“அதேநேரம், இன்றைய மகா சிவராத்திரி வழிபாடுகளிற்கு எந்தவித இடையூறுகளையும் மேற்கொள்ளாமல் இருப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்பதை இலங்கை தழுவிய சைவசமயிகள் சார்பாக அகில இலங்கை சைவ மகா சபை வலியுறுத்தி நிற்கின்றது

“மிகுந்த இன்னல்களை தொடர்ச்சியாக சந்தித்து எமது பூர்வீக வழிபாட்டு உரிமையை விட்டுக்கொடுக்காத அதற்காக இத்துணை தியாகங்களை செய்து வரும் வெடுக்குநாறிமலை ஆதி சிவனின் தமிழ்ச்சைவக் குடிகளிற்கு தலைமைப் பூசகர் மற்றும் பரிபாலன சபைக்கு முழுமையான ஆதரவை வெளிப்படுத்தி நிற்கின்றோம்

“இந்த உன்னத சைவர்களின் வழிபாட்டு மகா சிவராத்திரி தினத்திலே ஏற்பட்டுள்ள அனைத்து துன்பங்களையும் தீர்த்து அருள் புரிய முழுமுதற் பரம்பொருள் ஆதி சிவனை மனமுருகிப் பிராத்திக்கின்றோம்” என்று, அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி