ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் கோட்டையாக விளங்கிய கம்பஹா மாவட்டத்தில் உள்ள மொட்டுக் கட்சி

நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவை ரணில் விக்கிரமசிங்க பெற்றுள்ளார்.

மொட்டுச் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு சபைக்கு தெரிவான 13 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஐவர் மாத்திரமே தற்போது மொட்டுக் கட்சி பக்கம் நிற்கின்றனர்.

2020இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் 65.76 சதவீத வாக்குகளுடன் 13 ஆசனங்களை மொட்டுக் கட்சி கைப்பற்றியது.

 மேற்படி 13 நாடாளுமன்ற உறுப்பினர்களில் கம்பஹா மாவட்ட தலைவரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அமைச்சர் நளின் பெர்ணான்டோ, இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி, நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா, நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண ஆகியோர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளனர்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவே களமிறங்க வேண்டும் எனவும் அறிவித்து வருகின்றனர்.

அதேபோல் மொட்டுக் கட்சி பட்டியலில் கம்பஹா மாவட்டத்தில் விருப்புவாக்கு பட்டியலில் முதலிடம் பிடித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா, டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையில் செயற்பட்டு வருகின்றார். அவர் தற்போது சஜித் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளார்.

இராஜாங்க அமைச்சர் இந்திக அநுருத்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான கோகிலா குணவர்தன, உபுல் மகேந்திர ராஜபக்ஷ, பிரதிப் விதான, மிலான் ஜயதிலக்க ஆகியோரே மொட்டு கட்சி பக்கம் நிற்கின்றனர். எனினும், நாமல் ராஜபக்ஷ தலைமையில் திவுலபிட்டிய ஆசனத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் கம்பஹா மாவட்டத்தில் உள்ள எம்.பிக்களில் ஒருவர் மாத்திரமே (இந்திக அநுருத்த) பங்கேற்றுள்ளார்.

கம்பஹா மாவட்டம் என்பது, பெசில் ராஜபக்ஷவின் அரசியல் கோட்டையாகவும் விளங்குகின்றது. அம்மாவட்டத்தில் போட்டியிட்டே அவர் 4 இலட்சத்துக்கு மேற்பட்ட விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார்.

அதேவேளை, பெசில் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ள நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மொட்டுக் கட்சி சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளது. இந்தச் சந்திப்பின் பின்னர் தீர்க்கமான சில அரசியல் முடிவுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகவுள்ளன.

தமிழ், சிங்கள புத்தாண்டுக்குப் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாள் நிர்ணயிக்கப்படும் என்று ராஜபக்ஷ குடும்பத்தின் முக்கியஸ்தரான இலங்கைக்கான முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.

மொட்டுக் கட்சி தலைமையகத்தில் பெசில் ராஜபக்ஷவுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் பின்னரே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

'ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும். புத்தாண்டு முடிந்த பின்னர் நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாள் நிர்ணயிக்கப்படும். அதில் பெரும்பான்மைப் பலத்தை மொட்டுக் கட்சி கைப்பற்றும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஜனாதிபதியின் பதவிக் காலம் முடியும் வரை ரணிலுக்கு ஆதரவு வழங்குவோம். அதன்பின்னர் ஆதரவு இல்லை. முதலில் நாடாளுமன்றத் தேர்தலே நடத்தப்படும். அதன்பின்னர் ஜனாதிபதித் தேர்தல் பற்றி பேசுவோம்.' - என்று உதயங்க வீரதுங்க மேலும் கூறினார்.

பெசில் ராஜபக்ஷ மார்ச் 5ஆம் திகதி நாடு திரும்புவார் என்ற தகவலை முதன்முதலில் உதயங்க வீரதுங்கவே வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, தேர்தலை இலக்கு வைத்து ஐக்கிய தேசியக் கட்சி மார்ச் 10ஆம் திகதி முதலாவது மக்கள் கூட்டத்தை குருநாகல், குளியபிட்டியவில் நடத்தவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சி அழைப்பையேற்று ரணில் விக்கிரமசிங்க பங்கேற்பார் எனவும், சுமார் ஒரு வருடங்களுக்குப் பின்னர்  ரணில் விக்கிரமசிங்க அரசியல் மேடையேறுகின்றார் எனவும் அவர் ஐ.தே.கவின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி