நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் பாரிய பொறுப்பு பாதுகாப்புப் படையினருக்கு இருப்பதாகவும், அதில் தலையிடவோ

அல்லது கட்டுப்படுத்தவோ எவருக்கும் இடமளிக்க முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மக்களின் இறைமையையும் இலங்கையின் தனித்துவத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு பாதுகாப்புத் தரப்பினருக்கும் உண்டு என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இன மற்றும் மத ரீதியாக எவரேனும் செயற்பட முற்பட்டால் அது இலங்கையின் தனித்துவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் வலியுறுத்தினார்.

இன்று (16) முற்பகல் தியத்தலாவ சிறிலங்கா இராணுவ கல்வியற் கல்லூரியின் கெடட் அதிகாரிகள் விடுகை அணிவகுப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்துரைத்த ஜனாதிபதி, இலங்கை இராணுவம் பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட திறமையான இராணுவம் எனவும் அதன் பெருமையைப் பேணுவது அதனுடன் இணைந்த அனைவரினதும் பொறுப்பு எனவும் தெரிவித்தார்.

தனக்குக் கீழ் உள்ள அனைவருக்கும் அச்சமின்றி தலைமைத்துவத்தை வழங்குமாறு பிரசன்னமாகியிருந்த அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்ட அதிபர், இக்கட்டான காலங்களில் தலைமைத்துவம் வழங்கப்பட வேண்டுமெனவும், அதனை மனதில் கொண்டு நாட்டுக்கான பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

“இலங்கை ஒரு இறையாண்மை கொண்ட நாடு. நாங்கள் 1948 முதல் இறையாண்மை கொண்ட நாடாக செயற்பட்டு வருகிறோம். அந்த இறையாண்மை கொண்ட நாட்டின் அதிகாரம் மக்களுக்குரியது. அரசாங்கங்கள் மக்களின் வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

“மேலும் இந்த நாடு இலங்கை தனித்துவத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நாம் அனைவரும் இலங்கையர்கள். இலங்கையர்களாகிய நாம் சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற எமது தேசியத்தை பாதுகாப்பதுடன் இலங்கையர் என்ற நாட்டின் தனித்துவத்தையும் பாதுகாக்க வேண்டும்.

“நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும். ஒரு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது என்ன நடக்கும் என்பதை கடந்த காலங்களில் நாம் அனுபவித்தோம். அப்போது நாட்டின் இறையாண்மை மட்டுப்படுத்தப்படும். நாட்டு மக்களை சமமாக நடத்தும் வகையில் சமூக முன்னேற்றமும் ஏற்பட வேண்டும். பொருளாதார முன்னேற்றமும் சமூக முன்னேற்றமும் இதன்போது மிக முக்கியம். இந்த கட்டமைப்பிற்குள் நாம் செயல்பட வேண்டும்.

“ஒவ்வொரு குழுவுக்கும் இந்த கட்டமைப்பைப் பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது. அந்த பொறுப்பு அதிபர் முதல் கீழ்நோக்கிச் செல்கிறது. நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு இராணுவத்துக்கு உள்ளது. அதில் தலையிடவோ அல்லது கட்டுப்படுத்தவோ எவருக்கும் இடமளிக்க முடியாது.அதே சமயம் அதிகாரம் சார் மக்களின் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும்.

“அத்துடன் இலங்கையின் தனித்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த தனித்துவத்தை பாதிக்கும் வகையில் எவரேனும் செயற்பட முற்பட்டால் அல்லது இன மற்றும் மத அடிப்படையில் தனித்தனியாக செயல்பட முயற்சித்தால் அது இலங்கையின் தனித்துவத்திற்கு கேடு விளைவிக்கும் செயற்பாடாகும்.

“இலங்கை இராணுவம் ஒரு புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டுள்ளது. ஆசியாவில் நவீன இராணுவங்கள் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில், இலங்கை நான்காவது இடத்தில் இருந்தது. 1881இல், இலங்கை காலாட்படை ஆரம்பிக்கப்பட்டபோது, நாங்கள் அந்த நிலையை அடைந்தோம். மேலும், வரலாற்றில் இடம்பெற்ற ஒவ்வொரு பாரிய போர்களிலும் நமது பாதுகாப்புப் படைகள் பங்கேற்றுள்ளன. இந்த பெருமைமிக்க இராணுவத்தின் கௌரவத்தை பாதுகாப்பது உங்களின் பொறுப்பாகும்.

“நீங்கள் தலைமை தாங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். அச்சமின்றி அந்தத் தலைமையை உங்களுக்கு கீழ் உள்ள அனைவருக்கும் வழங்குங்கள். உங்கள் பொறுப்புகளை புறக்கணிக்காதீர்கள். குறிப்பாக கடினமான காலங்களில்தான், தலைமைத்துவம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். அந்தக் கடமையை நினைவில் வைத்து நாட்டுக்கான பொறுப்பை நிறைவேற்றுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று ஜனாதிபதி மேலும் கூறினார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, பாதுகாப்புப் பதவிநிலைப் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, தியத்தலாவ இராணுவ கல்வியற் கல்லூரியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷார மகலேகம், உட்பட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் கலைந்து சென்ற கெடட் உத்தியோகத்தர்களின் பெற்றோர்கள் உட்பட அதிதிகள் குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

army_1.jpg

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி