“கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மக்களை மாத்திரம் இலக்காகக் கொண்டு தனிப்பட்ட தகவல்கள் திரட்டப்படுகின்றன. வாழ்த்து

தெரிவிப்பதற்காவா மதம், பிறந்த திகதி உள்ளிட்ட விடயங்கள் கோரப்படுகின்றன. தமிழர்களை இலக்காகக் கொண்ட தகவல் திரட்டலை உடன் நிறுத்துங்கள்” என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில்,

“கிருலப்பனை, வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை, நாரஹேன்பிட்டி, தெஹிவளை, பம்பலப்பிட்டி, மட்டக்குளி, முகத்துவாரம் ஆகிய பகுதிகளில் வாழும் தமிழர்களை இலக்காகக் கொண்டு தகவல் திரட்டும் நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

“பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் தகவல் கோருவதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன என்று குறிப்பிடப்படுகின்றது. ஆனால், விண்ணப்பங்கள் சிங்கள மொழியில் மாத்திரம் விநியோகிக்கப்படுகின்றன. பொலிஸ் கட்டளைச் சட்டம் பற்றி பேசும் இலங்கைப் பொலிஸூக்கு நாட்டின் அரசமைப்பு சட்டம் தெரியவில்லை.

“தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் நாட்டின் அரச கரும மொழிகளாக அரசமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், சிங்கள மொழியில் மாத்திரமே சகல விண்ணப்பங்களும் வழங்கப்படுகின்றன.

“இது டிரான் அலஸின் பொலிஸ் இராஜ்ஜியமா? ரணில் விக்கிரமசிங்கவின் பொலிஸ் இராஜ்ஜியமா? அல்லது தேசபந்துவின் பொலிஸ் இராஜ்ஜியமா? இந்த நாட்டில் யுத்தம் இல்லை, பயங்கரவாதம் இல்லை. அவ்வாறான நிலையில் ஏன் வீடு வீடாகச் செல்கின்றீர்கள்? தகவல் திரட்டுகின்றீர்கள்.?

“தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்குவதைப் போன்று பொலிஸார் வீடு வீடாகச் சென்று விண்ணப்பப் படிவங்களை வழங்குகின்றார்கள். பொலிஸார் பொலிஸூக்குரிய வேலையைப் பார்க்க வேண்டும். அதை விடுத்து கிராம சேகவரின் வேலையைப் பொலிஸ் செய்யகூடாது.

“விநியோகிக்கப்படும் விண்ணப்பப்படிவத்தில் முழுப் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் மதம் உள்ளிட்ட தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன. மதம் தொடர்பான விபரங்களை ஏன் கேட்கின்றீர்கள்? தீபாவளி, நத்தார் மற்றும் தைப்பொங்கல் ஆகிய பண்டிகைகளுக்கு வாழ்த்து அனுப்புவதற்காகவா? அதேபோல் பிறந்த திகதி கேட்கப்படுகின்றது. பிறந்த தினத்துக்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்காகவா? அத்துடன் தனிப்பட்ட விடயங்கள் கோரப்படுகின்றன.

“பாதாளக் குழுக்கள் மற்றும் சமூக விரோதச் செயற்பாட்டாளர்களுடன் பொலிஸூக்குத் தொடர்பு உண்டு. நான் ஒட்டுமொத்தப் பொலிஸாரையும் குறிப்பிடவில்லை. ஒருசிலர் சிறந்த முறையில் சேவையாற்றுகிறார்கள். தனிப்பட்ட தகவல்களைப் பொலிஸார் கோரும் போது பொதுமக்கள் அச்சமடைகின்றார்கள்.

“தொலைபேசி இலக்கத்தை வைத்துக்கொண்டு எதனையும் செய்ய முடியும். தமிழ் மக்களை மாத்திரம் இலக்காகக் கொண்டு தகவல் கோரப்படுகின்றன. ஆகவே, இதனை உடன் நிறுத்துங்கள்” என்றார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி