“அரசமைப்புக் கவுன்ஸிலில் வடக்கு - கிழக்கைப் பிரதிநிதித்துவப்படும் தமிழர் ஒருவர் கூட இல்லாமல் இருப்பது, எங்களைத் தேசிய

வாழ்க்கையில் இருந்து வெளியேற்றுவதற்கான ஒரு நடவடிக்கை” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வவுனியாவில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் கட்சியின் மாவட்டக் கிளையுடன் நேற்று மாலை இடம்பெற்ற சந்திப்பின் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:-

“கட்சியின் மாநாடு எதிர்வரும் ஜனவரி மாதம் இறுதியில் நடைபெறவுள்ளது. இந்தத் தடவை இம்மாவட்டத்தால் புதிய தலைவரைத் தெரிவு செய்யக்கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது.

“கட்சி உறுப்பினர்கள் கட்சி யாப்பின் அடிப்படையில் மூன்று பேரைத் தலைமைப் பதவிக்குப் பிரேரித்துள்ளார்கள். இந்த மூன்று பேரும் இறுதி வரைக்கும் தலைவர் தெரிவில் இருந்தால் யாப்பின் அடிப்படையில் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் பொதுச் சபை உறுப்பினர்கள் தலைவரைத் தெரிவு செய்வார்கள். வவுனியா மாவட்டத்தில் இருந்து பொதுச் சபைக்கு 23 பேர் அங்கம் வகிப்பார்கள்.

“வவுனியா மாவட்ட கிளையானது தலைவர் தெரிவில் போட்டியிடுபவர்களைச் சந்தித்து உரையாட நேரம் கேட்டிருந்தார்கள். அதனடிப்படையில் சந்தித்து உரையாடினேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது” என்றார்.

இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தின் இந்தக் கூட்டத்தொடரை நிறைவுக் கொண்டுவரும் வகையில், நாடாளுமன்றத்தை இடைநிறுத்த முயற்சிக்கின்றார் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன, இதுதொடர்பில் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் கூறிய பதில்வருமாறு:-

“நாடாளுமன்றக் கூட்டத் தொடரை நிறைவுக்குக் கொண்டு வர வேண்டிய தேவை கிடையாது. ஏனெனில் அது விசேட சந்தப்பத்தில்தான் நிகழ வேண்டும். அதற்கான பாரம்பரியங்கள் இருக்கின்றன. ஆகவே தவறான, நோக்கத்துக்காக நாடாளுமன்றக் கூட்டத் தொடரை நிறைவுபடுத்துவது பிழையானது.

“நாடாளுமன்றக் குழுக்கள் சிலவற்றின் தலைவர்களை மாற்றுவதற்காக ஜனாதிபதி முதலில் இவ்வாறு நடந்துள்ளார். அதைச் செவ்வதற்குத்தான் மீண்டும் இவ்வாறு முயற்சிக்கிறார்கள் எனக் கருதுகின்றார்கள். இது பொருத்தமற்ற செயற்பாடு. அதனை நாம் எதிர்ப்போம்” என்றார்.

அரசமைப்புக் கவுன்ஸிலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட போதும், அதற்கான நியமனம் ஏன் இன்னும் வழங்கப்படவில்லை என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டார். அப்போது சுமந்திரன் எம்.பி. கூறியவை வருமாறு:-

“சித்தார்த்தனின் பெயரை நாம் பரிந்துரைத்த போது எதிர்க்கட்சியில் இரண்டாவது பெரிய கட்சியாக தமிழரசுக் கட்சி, அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்தது. ஆகவே, அவருக்கு அந்த இடம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக அரச பக்கத்தில் இருந்த சிலர் எதிர்க்கட்சிப் பக்கம் வந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களாக அமர்ந்திருக்கின்றார்கள். அவர்களுடைய எண்ணிக்கை எங்களது எண்ணிக்கையை விடக் கூடுதலாக உள்ளது. அவர்கள் இந்தச் சந்தர்ப்பம் தங்களுக்கு இந்தப் பிரதிநிதித்துவ உரிமையைக் கொடுக்க வேண்டும் என்று கேட்பதனால் ஒரு முடிவு இல்லாமல் கூட்டம் நிறைவடைந்திருக்கிறது.

“சபாநாயகர் இது சம்பந்தமாக தெளிவான முடிவை எடுக்காமல் இருக்கின்றார். அந்தப் பிரதிநிதித்துவம் உங்களுக்குதான் என்று எங்களிடம் சொல்கின்றார். ஆனால், அதனை இதுவரை செய்யவில்லை. எதிர்க்கட்சித் தலைவரும் இணங்கியுள்ளார். மொட்டுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கூட இணங்கியிருக்கிறார். ஆகையால் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மதானத்தைக் கூட நிறைவேற்றலாம். ஆனால், அது நிகழவில்லை. அண்மையில் நாடாளுமன்றத்தில் நான் இதுதொடர்பில் பிரஸ்தாபித்தேன்.

“1972ஆம் ஆண்டு அரசமைப்பு கொண்டுவரப்பட்ட போது, ஒரு பேரினவாத சம்பவமாக எங்களைத் தேசிய வாழ்க்கையில் இருந்து புறக்கணித்து ஒதுக்கி வைத்தார்கள். அது திரும்பவும் நடைபெறுவதற்கான அறிகுறியாகத்தான் இதனைப் பார்க்கின்றேன்.

“அரசமைப்புக் கவுன்ஸில் என்பது முக்கியமானது. அதில் வடக்கு - கிழக்கைப் பிரதிநிதித்துவப்படும் தமிழர் ஒருவர்கூட இல்லாமல் இருப்பது எங்களைத் தேசிய வாழ்க்கையில் இருந்து வெளியேற்றுவதற்கான ஒரு நடவடிக்கை எனக் கூறியுள்ளோம். இதனைத் தீர்ப்பதற்கானமுயற்சி எடுத்துள்ளார்கள். இது தொடப்பில் வேறு எந்தவித மாற்றுத் தீர்வுக்கும் நாம் செல்ல மாட்டோம். எமது பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என நாம் நிர்ப்பந்தித்துள்ளோம்” என்றார்.

(காலைமுரசு)

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி