'போரில் தமிழ் இளைஞர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்களோ, அதேபோன்று போதைப்பொருள் ஊடாகவும் தமிழ் இளைஞர்கள்

அழிக்கப்படுகின்றார்கள். வடக்கில் தீவிரடைந்துள்ள போதைப்பொருள் பாவனையில் விற்பவர்கள் யார், வாங்குபவர்கள் யார் என்பதை அறிந்தும் பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமல் உள்ளார்கள்” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரங்கள் அமைச்சு மற்றும் மகளிர், சிறுவர் விவகார அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத் தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'மன்னார் மாவட்டத்தில் நறுவிலிக்குளம் பிரதேசத்தில் மன்னார் மாவட்டத்திற்கான பொது மைதானத்துக்கான கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு வெவ்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டு இன்று வரை அந்தப் பணிகள் நிறைவுபெறவில்லை.

ஏறக்குறைய 50 சதவீத நிதி ஒதுக்குகைகளுக்கன வேலைத்திட்டங்கள் நடந்தேறியுள்ளன. 2023ஆம் ஆண்டுக்குள் மைதானப் பணிகள் பூர்த்தியடையும் என்று அமைச்சாலும் அதிகாரிகளினாலும் உறுதி கூறப்பட்டாலும் பூர்த்தியடையவில்லை.

கிளிநொச்சி மாவட்டத்தில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானப் பணிகள் 9 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டன. இன்னும் பூர்த்தியடையவில்லை. மத்திய அரசிடமிருந்து மாகாண சபைக்கு அந்த மைதானம் இன்னும் கையளிக்கப்படவில்லை.

2014 ஆம் ஆண்டு அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயிடம் இந்த மைதானம் எப்போது திறக்கப்படும் எனக் கேட்டேன். 2015 ஆம் ஆண்டு தேசிய விளையாட்டு விழா அந்த மைதானத்தில்தான் நடக்கும் என்றார். ஆனால், இன்று வரை மைதான வேலைகளே பூர்த்தி செய்யப்படவில்லை.

வவுனியா மாவட்டத்திலும் இதே போன்றே ஓமந்தையில் இருக்கின்ற பொது மைதானப் பணிகள் ஏறக்குறைய பூர்த்தியாகி விட்டன. ஆனால் மின்சார இணைப்பு இன்னும் வழங்கப்படவில்லை. அதனால் விளையாட்டு வீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் அந்த மைதானம் இன்னும் கையளிக்கப்படவில்லை. ஆகவே, உடனடியாக இந்த மைதானங்களை வீரர்களிடம் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொறுப்புக்கொடுக்கின்ற வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

முல்லைத்தீவில் மாவட்டத்துக்குரிய மைதானம் இல்லை. ஒரு மைதானத்துக்குரிய காணியை இனம் காண்பதற்கு எல்லோருமே தடையாக இருந்துள்ளார்கள். 3 இடங்களில் காணி பார்த்தார்கள். ஆனால், ஒரு மைதானத்தை அமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒவ்வொரு காரணம் கூறிக் காலம் கடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அங்குள்ள இளைஞர்களுக்கு விளையாட்டுக்களில் பங்கேற்கும் வாய்ப்பு மறுக்கப்படுகின்றது.

அண்மையில் முல்லைத்தீவு, முள்ளியவளையை சேர்ந்த 72 வயதான அகிலத்திரு நாயகி என்ற வீராங்கனை பிலிப்பைன்ஸில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் இரு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

வன்னியில் 72 வயதிலும் சாதிக்கக் கூடிய வீர, வீராங்கனைகள் இருக்கின்றனர். இவ்வாறான நிலையில் இளைஞர், யுவதிகளுக்கு விளையாட்டுக்களில் வாய்ப்புக்கள் வழங்கப்படும் பட்சத்தில் தேசிய, சர்வதேச மட்டத்தில் பிரகாசிப்பார்கள். அதற்கான வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுங்கள்.

வடக்கு மாகாணத்தில் இன்று இளைஞர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி வருகின்றனர். அவர்கள் வேறு திசைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். சிலர் தற்கொலை செய்கின்றனர். பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் கூட மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இளைஞர்களுக்குரிய வாய்ப்புக்கள்,வசதிகள் மறுக்கப்பட்டதாலேயே ஆயுதப் போராட்டம் உருவானது. இளைஞர்களைப் போதைப்பொருள் பாவனையிலிருந்து தடுப்பதற்கான எந்த நடவடிக்கையும் அங்கு இல்லை. போதைப்பொருள் புழக்கத்துக்கு அங்கு பொலிஸார் உடந்தையாக உள்ளனர்.

போதைப்பொருள் விற்போர், வாங்குவோரைப் பொலிஸாருக்குத் தெரியும். பாவனையாளர்களையம் பொலிஸாருக்கு தெரியும். ஆனால், போரில் எவ்வாறு இளைஞர்கள் கொல்லப்பட்டார்களோ அதேபோன்று இளைஞர்கள் போதைப்பொருள் பாவனை மூலமும் அழிவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது” என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி