ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி மடகாஸ்கர் உலகின் முதல் "பருவநிலை மாற்றப் பஞ்சத்தை" எதிர்கொள்ளும் விளிம்பில் உள்ளது. நான்கு ஆண்டுகளாக மழையின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் மோசமான பசி பட்டினியாலும், உணவுப் பாதுகாப்பின்மையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த நான்கு தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மிக மோசமான வறட்சி, மடகாஸ்கர் நாட்டின் தெற்கில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட விவசாய சமூகங்களை கடுமையாக பாதித்துவிட்டது, இதனால் அவர்கள் பூச்சிகளை வேட்டையாடி உண்டு உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

"இந்த பஞ்சம் போன்ற நிலைமைகள், பருவநிலையால் ஏற்படுகின்றன" என்று ஐக்கிய நாடுகளின் உலக உணவு திட்டத்தின் ஷெல்லி தக்ரல் கூறினார்.

தற்போது சர்வதேச அளவில் 30,000 பேர் அங்கீகரிக்கப்பட்ட உணவுப் பாதுகாப்பின்மையின் உச்ச நிலையில் (ஐந்தாவது நிலை) இருப்பதாக ஐநா மதிப்பிட்டுள்ளது. மடகாஸ்கரில் அறுவடைக்கு முந்தைய பாரம்பரிய காத்திருப்பு காலத்தில் (பயிரை நடவு செய்த பின் அறுவடைக்கு காத்திருக்கும் காலம்) நுழைய இருப்பதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கவலை நிலவுகிறது.

"இதுவரை காணப்படாத நிலை இது. இந்த மக்கள் பருவநிலை மாற்றத்திற்கு எதுவும் செய்யவில்லை. அவர்கள் புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதில்லை. இருப்பினும் அவர்கள் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்கிறார்கள்," என ஷெல்லி தக்ரல் கூறினார்.

அம்போசாரி மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமமான ஃபாண்டியோவாவில் வாழும் குடும்பத்தினர், சமீபத்தில் அவர்கள் உண்ணும் வெட்டுக்கிளிகளை, பார்வையிட வந்த ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்ட குழுவிடம் காட்டினர்.

பூச்சிகளை வேட்டையாடி உண்ணும் மக்கள்

பூச்சிகளை வேட்டையாடி உண்ணும் மக்கள்

"என்னால் முடிந்தவரை பூச்சிகளை சுத்தம் செய்கிறேன், ஆனால் கிட்டத்தட்ட தண்ணீரே இல்லை" என நான்கு குழந்தைகளின் தாயான டமரியா கூறினார்.

"இதைத் தான் நானும் என் குழந்தைகளும் கடந்த எட்டு மாதங்களாக தினமும் சாப்பிட்டு வருகிறோம், ஏனென்றால் நாங்கள் சாப்பிட எதுவும் இல்லை, நாங்கள் விதைத்ததை அறுவடை செய்ய மழை இல்லை," என கூறினார் டமரியா.

"'எஞ்சிய வளங்களையாவது விட்டு வையுங்கள்" - செங்கல் சூளைகளால் பாதிக்கப்பட்ட தடாகம் மக்கள்

தண்ணீர், தண்ணீர்: ரோம் முதல் சென்னை வரை தீராத உலக பிரச்னை

"கற்றாழை இலைகளைத் தவிர இன்று எங்களுக்கு சாப்பிட எதுவும் இல்லை" என மூன்று குழந்தைகளின் தாயான போலே, உலர்ந்த பூமியில் அமர்ந்த படி கூறினார்.

அண்டை வீட்டாரைப் போலவே, தனது கணவரும் சமீபத்தில் பசியால் இறந்துவிட்டதாக அவர் கூறினார், அவர் உணவளிக்க மேலும் இரண்டு குழந்தைகள் இருந்தன.

"நான் என்ன சொல்ல முடியும்? நாங்கள் உயிர்வாழ மீண்டும் மீண்டும் கற்றாழை இலைகளைத் தேடுவதே எங்கள் வாழ்கையாக இருக்கிறது." என்கிறார் போலே.

நீர் மேலாண்மை

வறாட்சியில் மடகாஸ்கர்

வறாட்சியில் மடகாஸ்கர்

மடகாஸ்கர் அடிக்கடி வறட்சியை அனுபவித்தாலும், எல் நினோவால் ஏற்படும் வானிலை மாற்றத்தால் அடிக்கடி பாதிக்கப்படுகிறது என்றாலும், காலநிலை மாற்றம் தற்போதைய பிரச்சனையுடன் நேரடியாக இணைக்கப்படலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர்.

"சமீபத்தைய ஐபிசிசி அறிக்கையில், மடகாஸ்கரில் ஈரப்பதம் குறைவதை எங்களால் பார்க்க முடிந்தது. பருவநிலை மாற்றம் தொடர்ந்தால் அது அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

"பல வழிகளில் மக்கள் தங்கள் வாழ்க்கை முறைகளை மாற்றிக்கொள்ள இது வலுவான வாதமாக பார்க்கலாம்" என்கிறார் தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப் டவுன் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் மடகாஸ்கன் விஞ்ஞானி மற்றும் முனைவர் ரோண்ட்ரோ பரிமலாலா.

கலிபோர்னியாவில் உள்ள சான்டா பார்பரா பல்கலைக்கழகத்தில் அதே வளிமண்டல தரவைப் பார்த்து, பருவநிலை அபாய மையத்தின் இயக்குநர், க்றிஸ் ஃபங்க், "வளிமண்டல வெப்பமடைதல்" உடனான தொடர்பை உறுதிப்படுத்தினார், மேலும் மடகாஸ்கர் அதிகாரிகள் நீர் மேலாண்மையை மேம்படுத்தும் பணிகளைச் செய்ய வேண்டும் என்று கூறினார்.

"குறுகிய காலத்தில் நிறைய செய்ய வேண்டும், அது செய்ய முடியும் என நாங்கள் நினைக்கிறோம். சாதாரண மழையை விட எப்போது அதிக மழை பொழிய உள்ளது என கணிக்க முடியும், விவசாயிகள் தங்கள் பயிர் உற்பத்தியை அதிகரிக்க அத்தகவலைப் பயன்படுத்தலாம். பருவநிலை மாற்றத்தின் போது நாங்கள் சக்தியற்றவர்கள் அல்ல ," என்று கூறினார்.

தற்போது நிலவும் இந்த வறட்சியின் தாக்கம், தெற்கு மடகாஸ்கரில் உள்ள பெரிய நகரங்களிலும் உணரப்படுகிறது. பல குழந்தைகள் உணவுக்காக தெருக்களில் பிச்சை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

"சந்தையில் விலை மூன்று அல்லது நான்கு மடங்கு உயர்கின்றன. உணவு வாங்குவதற்கு மக்கள் தங்கள் நிலங்களை விற்று பணம் பெறுகிறார்கள்," என டொலானாரோவில் இருக்கும் 'சீட்' என்கிற தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் சினா எண்டோர் கூறினார்.

அவருடைய சக ஊழியர் லோம்பா ஹசோவானா, அவரும் இன்னும் பலரும் தங்கள் மரவள்ளிக் கிழங்கு வயல்களில் தூங்கச் சென்று உணவுக்காக ஆசைப்படும் மக்களிடமிருந்து தங்கள் பயிர்களைப் பாதுகாக்க முயற்சிப்பதாகக் கூறினார்.

"நீங்கள் உங்கள் உயிரைப் பணையம் வைக்கலாம். எனக்கு இது மிகவும் கடினமாக உள்ளது, ஏனென்றால் ஒவ்வொரு நாளும் எனக்கும் என் குடும்பத்திற்கும் உணவளிப்பது பற்றி நான் சிந்திக்க வேண்டும்," என்று அவர் கூறினார்: "இப்போது வானிலை பற்றி எல்லாம் கணிக்க முடியாத நிலை இருக்கிறது. நாளை என்ன நடக்கும்? என்பது தான் மிகப்பெரிய கேள்வி குறி " என்கிறார்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி