இந்த ஆண்டுக்கான வரலக்ஷ்மி விரதம், இன்று ஓகஸ்ட் 8, 2025 வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது.
வரலக்ஷ்மி விரதம் 2025: திகதி மற்றும் முகூர்த்தம்:
- சிம்ம லக்ன பூஜை முகூர்த்தம் (காலை): 06:29 AM முதல் 08:46 AM வரை
- விருச்சிக லக்ன பூஜை முகூர்த்தம் (பிற்பகல்): 01:22 PM முதல் 03:41 PM வரை
- கும்ப லக்ன பூஜை முகூர்த்தம் (மாலை): 07:27 PM முதல் 08:54 PM வரை
- ரிஷப லக்ன பூஜை முகூர்த்தம் (நள்ளிரவு): 11:55 PM முதல் ஆகஸ்ட் 09 01:50 AM வரை
வரலக்ஷ்மி விரதத்தின் முக்கியத்துவம்
வரலட்சுமி விரதம் என்பது காக்கும் கடவுளான விஷ்ணுவின் துணைவியும், செல்வத்தின் கடவுளும், வரங்களை அள்ளிக் கொடுப்பவரான லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட விழாவாகும், இது 'வர' என்று அழைக்கப்படுகிறது. இந்த புனித விரதம் பாரம்பரியமாக திருமணமான பெண்களால் அனுசரிக்கப்படுகிறது.
இந்த விரதம் பெண்கள் தங்கள் குடும்பத்தினரின், குறிப்பாக கணவர் மற்றும் குழந்தைகளின் நல்வாழ்வு, செழிப்பு மற்றும் நீண்ட ஆயுளுக்காக பக்தியுடன் கடைபிடிக்கிறார்கள். இந்த நாளில் விரதமிருந்து லட்சுமி தேவியை வழிபடுவது, வாழ்க்கையின் பல்வேறு வரங்களைக் குறிக்கும் லட்சுமியின் எட்டு தெய்வீக வடிவங்களான அஷ்டலட்சுமிகளை வீட்டிற்கு அழைப்பதாக நம்பப்படுகிறது.
இந்த நாளில் திருமணமான பெண்கள் புதிய ஆடைகளை அணிந்து, இனிப்புகள் மற்றும் பழங்களை வழங்கி, லட்சுமி தேவியை மகிழ்விக்க புனித பாடல்கள் மற்றும் மந்திரங்களை பாடுகிறார்கள்.
வரலக்ஷ்மி விரத சடங்குகள்
வரலட்சுமி விரதத்திற்கான ஏற்பாடுகள் பூஜைக்கு முந்தைய நாளிலிருந்தே தொடங்குகிறது. பெண்கள், பூஜைக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் ஒரு நாள் முன்னதாகவே வாங்கி பூஜைக்கான ஆரம்பகட்ட பணிகளைத் தொடங்குகிறார்கள்.
வெள்ளிக்கிழமை அன்று பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்துவிட்டு காலை சடங்குகளை முடித்த பிறகு, வீடு நன்கு சுத்தம் செய்யப்பட்டு, வரலட்சுமி தேவியின் தெய்வீக சக்தியை வரவேற்க பூஜை செய்யப்போகும் ஒரு அழகான கோலம் வரையப்படுகிறது. பூஜையின் முக்கிய சடங்கு லட்சுமி தேவியை குறிக்கும் கலசத்தை தயாரிப்பதிலிருந்து தொடங்குகிறது. ஒரு வெள்ளி அல்லது வெண்கலப் பானை தேர்ந்தெடுக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு சந்தன கரைத்து பானை முழுவதும் பூசப்படுகிறது மற்றும் அதில் ஸ்வஸ்திக் சின்னம் வரையப்படுகிறது.
பின்னர் அதில் தண்ணீர் அல்லது அரிசி, சுண்ணாம்பு, நாணயங்கள், வெற்றிலை மற்றும் புனித இலைகள் நிரப்பப்படுகிறது. இந்த பொருட்கள் பிராந்தியத்திற்கு ஏற்ப மாறுபடலாம். பானையின் கழுத்து மஞ்சள் நிற துணியில் சுற்றப்பட்டு, மா இலைகள் மற்றும் மஞ்சள் தடவிய தேங்காய் மேலே வைக்கப்படுகின்றன. தேங்காயில் லட்சுமியின் படம் ஒட்டப்படுகிறது அல்லது வரையப்படுகிறது, மேலும் கலசம் அரிசி மேட்டில் வைக்கப்படுகிறது. இதுதான் வரலட்சுமி பூஜைக்கு மிகவும் அவசியமானதாகும்.
பூஜையின் போது உச்சரிக்க வேண்டிய சக்திவாய்ந்த மந்திரங்கள்
ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திரம்
"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்ம்யை நம"
செல்வம், செழிப்பு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்காக மகாலட்சுமியை அழைக்கும் மிகவும் சக்திவாய்ந்த பீஜா மந்திரம் இதுவாகும்.
லக்ஷ்மி காயத்ரி மந்திரம்
"ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்ம்யை ச வித்மஹே விஷ்ணு பத்ன்யை ச தீமஹி தன்னோ லக்ஷ்மி பிரச்சோதயாத்"
தெய்வீக லட்சுமி ஆற்றலை எழுப்பவும், அதிர்ஷ்டம் மற்றும் கருணையின் ஆசீர்வாதங்களை அழைக்கவும் இது ஒரு சக்திவாய்ந்த மந்திரமாகும்.
கனகதாரா ஸ்தோத்ர மந்திரம்
"ஓம் அங் ஹரிம் கலிம் ஷோபனம் ச தனம் மே தேஹி லக்ஷ்மி"
இந்த மந்திரம் ஆதி சங்கராச்சாரியாரின் கனகதாரா ஸ்தோத்திரத்தால் ஈர்க்கப்பட்டு வாழ்க்கையில் குறைவிலா செல்வத்தை வரவழைக்கிறது.
அஷ்ட லட்சுமி மந்திரம்
"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் ஐஸ்வர்ய லக்ஷ்ம்யை நம"
இந்த மந்திரம் பல்வேறு வகையான செல்வங்களைக் கொண்டுவரும் தெய்வத்தின் எட்டு வடிவங்களான அஷ்ட லட்சுமிகளை அழைக்கிறது.
தன லட்சுமி மந்திரம்
"ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் லக்ஷ்மிப்யோ நம"
அஷ்ட லட்சுமிகளில் ஒருவரான தன லட்சுமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த மந்திரம் பொருள் மற்றும் நிதி செல்வத்தை மேம்படுத்துகிறது.
லக்ஷ்மி குபேர மந்திரம்
"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீ சித்த லக்ஷ்மி குபேராய நம"
இந்த மந்திரம் லட்சுமி தேவி மற்றும் குபேரரின் ஆசீர்வாதங்களை ஒன்றிணைத்து செல்வத்தையும், செழிப்பையும் பெருக்குகிறது.
சுப லாப மந்திரம்
"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரேயை நம"
மங்களகரமான ஆதாயங்களுக்காக ஜபிக்கப்படும் இந்த மந்திரம் லாபத்தையும் வணிக வெற்றியையும் தருகிறது.
சர்வ ஐஸ்வர்ய லக்ஷ்மி மந்திரம்
"ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மியே நம"
இந்த மந்திரம் ஒருவரின் வாழ்க்கையில் முழுமையான செழிப்பை அழைக்கிறது.
பூஜையின் தொடக்கம்
வரலட்சுமி பூஜையின் தொடக்கம் முழுமுதற் கடவுளான விநாயகர் வழிபாட்டிலிருந்து தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து லட்சுமி சஹஸ்ரநாமம் போன்ற மந்திரங்கள். வீட்டில் தயாரிக்கப்பட்ட நெய்வேத்தியங்கள் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. பொங்கல் அல்லது பாயசம் பிரதான பிரசாதமாக வழங்கப்படுகிறது.
தீபாராதனை காட்டப்பட்டவுடன், பெண்கள் ஆசீர்வாதத்திற்காக தங்கள் மணிக்கட்டில் மஞ்சள் நூலைக் கட்டுகிறார்கள். பூஜை முடியும் வரை பெண்கள் சாப்பிடாமல் விரத்திமிருக்கிறார்கள், விரத முறைகள் இடத்துக்கு ஏற்ப மாறுபடும். சனிக்கிழமை, கலசம் பக்தியுடன் எடுத்து, அதிலுள்ள நீர் தீர்த்தமாக வீட்டின் அனைத்து மூலைகளிலும் தெளிக்கப்படும்.