கார்டினல் மெல்கம் ரஞ்சித் குறித்து தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவுக்கு சட்டக் கடிதம்
அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கார்டினல் மெல்கம் ரஞ்சித், 2019ஆம் ஆண்டு கொச்சிக்கடை தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு ஆராதனையில் கலந்து கொள்ளாதமைக்கு 'தெய்வீக எச்சரிக்கை' காரணமாக இருக்கலாம் என விமல் வீரவங்ச குறிப்பிட்டிருந்தார்.
கார்டினலுக்கு ஏப்ரல் 21 தாக்குதல்கள் குறித்து முன்பே தெரிந்திருக்கலாம் என விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.
வரலாற்றில் முதல்முறையாக, தாக்குதல்கள் நடந்த நாளில் கார்டினல் உயிர்த்த ஞாயிறு காலை ஆராதனையில் கலந்து கொள்ளவில்லை, இருப்பினும் முந்தைய ஆண்டுகளில் அவர் ஆராதனைகளில் கலந்துகொண்டார் என விமல் வீரவங்ச கூறியிருந்தார்.
இந்தநிலையில், இந்தக் கூற்றுகளை மறுத்த அருட்தந்தை சிறில் காமினி, அவை பொய்யானவை என்றும் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும் கூறினார்.
இலங்கையில் கத்தோலிக்கர்களுக்கு முக்கிய கொண்டாட்டமாகக் கருதப்படும் உயிர்த்த ஞாயிறு பண்டிகையின்போது, சனிக்கிழமை நள்ளிரவு உயிர்த்த ஞாயிறு திருப்பலியை கார்டினல் பாரம்பரியமாக நடத்துகிறார் என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
2019ஆம் ஆண்டில், கத்தோலிக்க வழக்கத்துக்கு இணங்க, கொட்டாஞ்சேனையில் உள்ள புனித லூசியஸ் தேவாலயத்தில் கார்டினல் இந்த நள்ளிரவு ஆராதனையை நடத்தினார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று காலை ஆராதனைகளை கார்டினல் பொதுவாக வழிநடத்துவதில்லை என்று அருட்தந்தை காமினி கூறினார்.
கருத்துச் சுதந்திரம் ஒரு அடிப்படை உரிமை என்றாலும், அது பொய்களைப் பரப்புவதற்கானதல்ல என அருட்தந்தை சிறில் காமினி எச்சரித்துள்ளார்.
தவறான கூற்றுக்களை முறையாகத் திருத்தக் கோரி விமல் வீரவங்சவுக்கு ஒரு சட்டக் கடிதத்தை வழங்க சட்டத்தரணிகள் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.