ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் உயிரிழந்ததையடுத்து,
பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு எடுத்து வருகின்றது.
இந்நிலையில், பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தடை ஏப்ரல் 30 முதல் மே 23 வரை நீடிக்கும் என்று இந்திய அரசு ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
புதிய நடவடிக்கையாக பாகிஸ்தான் விமான நிறுவனங்களின் விமானங்களுக்கு இந்தியா தனது வான்வழியை மூடியுள்ளது.
பாகிஸ்தானில் பதிவுசெய்யப்பட்ட விமானங்களுக்கும், பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களால் இயக்கப்படும் சொந்தமான அல்லது குத்தகைக்கு விடப்பட்ட விமானங்களுக்கும் இந்திய வான்வெளியில் அனுமதி இல்லை.
இந்தத் தடை பாகிஸ்தான் இராணுவ விமானங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் இடையே நேரடி விமானங்கள் இல்லாத நிலையில் சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிற கிழக்கு ஆசிய நாடுகளுக்கான விமானங்களுக்கு பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் இந்திய வான்வெளியைப் பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க வெள்ளை மாளிகை விரும்புவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதன்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, இன்று அல்லது நாளை பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் ரூபியோ பேசியதாவது,
"இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடக்கும் அனைத்தையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம். நாங்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்களுடன் வெளியுறவுத்துறை மட்டுமல்லாது, பல மட்டங்களில் தொடர்பில் இருக்கிறோம்.
தீர்வுக்காக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
நேற்றைய தினம், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இதில் தாக்குதல்தாரிகளுக்கு பதிலடி கொடுக்க முப்படைகளுக்கும் பிரதமர் மோடி முழு சுதந்திரம் கொடுத்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.