வடக்கு மாகாணத்தில் மருதங்கேணி முதல் முள்ளிவாய்க்கால் வரையாழ்ப்பாணம் மாவட்டம்,
கிளிநொச்சி மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம் ஆகியவற்றின் பெரும்பாலும் கடற்கரையோரப் பிரதேசங்களை அண்டி 5 ஆயிரத்து 940 ஏக்கர் நிலம் அரச உடமையாக்கப்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தல், காணி ஆணையாளர் நாயகத்தால் சத்தம் சந்தடியின்றி வெளியிடப்பட்டுள்ளது.
2025.03.28 ஆம் திகதிய 5620இலக்க வர் த்தமானி அறிவித்தல் மூலமே இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது என்று இப்போது தெரியவந்துள்ளது.
இதில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 319 காணிகளை உள்ளடக்கி 3 ஆயிரத்து 669 ஏக்கரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 507 காணிகளை உள்ளடக்கி ஆயிரத்து 702 ஏக்கரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 58 காணிகளை உள்ளடக்கி 515 ஏக்கரும் என மொத்தம் 5 ஆயிரத்து 940 ஏக்கர் நிலம் அரச உடமையாக்கப்படுகின்றது.
இவ்வாறு அரச உடமை என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள 5 ஆயிரத்து 940 ஏக்கர் நிலப்பரப்பில் பலரது வீடுகள், பொது இடங்கள், ஆலயங்கள் மட்டுமன்றி பல தொழில் முயற்சி மையங்களும் காணப்படுகின்றன எனக் கூறப்படுகின்றது.
யாழ். குடாநாட்டின் மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவு, கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளின் கடற்கரையோரங்கள்வழி யாக முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் வரை இந்தப் பிரதேசங்கள் நீள்கின்றன.
இந்தப் பிரதேசங்களில் உள்ள நிலங்களில் அரச நிலம் எது, தனியார் நிலம் எது எனப் பிரதேச செயலகங்களுக்கோ அல்லது மாவட்ட செயலகங்களுக்கோ அடையாளம் தெரியாத காரணத்தாலேயே இவ்வாறான அறிவித்தல் வெளியிடப்படுவதாகவும் - மூன்று மாத காலப் பகுதிக்குள் தமது காணி என்று தனியார் ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் பட்சத்தில் அந்த நிலங்களை விடுவித்து ஏனைய நிலங்கள் அரச நிலம் என 3 மாத நிறைவில் மீண்டும் ஒரு வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்படும் என அந்தப் பகுதிகளின் பகுதி பிரதேச செயலாளர்கள் பதிலளிக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் வெளிநாட்டில் இருக்கின்றமையாலோ அல்லது உயிரிழந்திருக்கின்றமையாலோ அந்த நிலங்களுக்கு உரிய காலத்தில் உரிமை கோராவிடின் அவ்வாறான நிலங்களையும் பொதுப் பயன்பாட்டு நிலங்களையும் அரச நிலங்களாக்கும் முயற்சியாகவே இது கருதப்படுவதாக அந்தப் பகுதிகளின் நில உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்தப் பிரதேசங்களில் 500 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை அரச காணிகளாகச் சுவீகரித்து பிற நாடு ஒன்றுக்கு வழங்க முயற்சி இடம்பெறுகின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டிய போது அவ்வாறு எந்த முயற்சியும் இல்லைஎன அரசும் அதிகாரிகளும் மறுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
- முரசு