நியூசிலாந்து நாட்டில் கொரோனாவுக்கு விடை கொடுக்கப்பட்டது. அங்கு இன்று முதல் கட்டுப்பாடுகள் இல்லாத சுதந்திர வாழ்க்கை தொடங்க உள்ளது.

ஒவ்வொரு நாட்டுக்கும் ஆசைதான், கொலைகார கொரோனா வைரசுக்கு விடை கொடுத்து விட வேண்டும் என்று.

ஆனால் கொரோனாவை வென்று காட்டி இருக்கிறது, நியூசிலாந்து. என்ற பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் ஆளுகிற இந்த நாட்டில் மொத்தம் 1,154 பேருக்குத்தான் கொரோனா தொற்று ஏற்பட்டது. பலியானவர்களின் எண்ணிக்கை 22 மட்டுமே. மற்றவர்கள் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். ஆக்லாந்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கடைசி நபர் 48 மணி நேரம் எந்த அறிகுறியும் இன்றி, குணமான நிலையில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதை ஆக்லாந்து பிராந்திய பொது சுகாதார துறை உறுதி செய்துள்ளது.

இந்த நாட்டில் கொரோனா கடந்த பெப்ரவரி மாதம் இறுதியில் நுழைந்தது. ஆனால் ஆரம்பத்திலேயே அந்த நாடு உஷாராக இருந்து விட்டது. மார்ச் 25-ந் திகதி அங்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. நான்கு நிலை எச்சரிக்கை அமைப்பை அந்த நாடு ஏற்படுத்தியது. பெரும்பாலான வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. பாடசாலைகள் மூடப்பட்டன. மக்கள் வீடுகளுக்குள் அடங்கினர்.

5 வாரங்களுக்கு பின்னர் மூன்றாம் நிலை எச்சரிக்கை அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது. உணவு விடுதிகள், ஹோட்டல்கள் திறக்கப்பட்டன. அத்தியவசியமற்ற சில வணிகங்கள் மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று குறைந்து கொண்டே வந்தது. அதைத் தொடர்ந்து கடந்த மாத மத்தியில் 2-ம் நிலை எச்சரிக்கை அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது. லெவல்-1 என்று சொல்லப்படுகிற இயல்பு நிலைக்கு ஜூன் 22-ந் தேதி திரும்பி விடலாம் என நியூசிலாந்து அரசு முடிவு செய்து வைத்திருந்தது.

ஆனால் அது இப்போது முன்கூட்டியே இன்று (செவ்வாய்க்கிழமை) அமலுக்கு வருகிறது. காரணம், கடந்த 17 நாட்களாக புதிதாக ஒருவருக்கு கூட அங்கு கொரோனா வைரஸ் தொற்று கிடையாது.

இன்று முதல் மக்கள் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் சுதந்திரமான வாழ்க்கைக்கு திரும்பப்போகிறார்கள். இனி அங்கு தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கத்தேவையில்லை. திருமணம், விழாக்கள், இறுதிச்சடங்குகள் என பொதுமக்கள் கூடுவதற்கு தடை ஏதும் கிடையாது. பொது போக்குவரத்து சாதனங்கள் இயங்கும். கட்டுப்பாடுகள் கிடையாது. நியூசிலாந்துக்கு வெளிநாட்டினர் யார் வந்தாலும் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது தொடரும் அதே நேரத்தில் அந்த நாட்டின் எல்லைகள் அனைத்தும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

இதுபற்றி பிரதமர் ஜெசிந்த ஆர்டெர்ன் கூருகையில்

“இந்த நாட்டில் யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று எனக்கு சொல்லப்பட்டபோது உற்சாக மிகுதியால் லேசாக நடனமே ஆடிவிட்டேன்.

நாம் பாதுகாப்பான, வலுவான நிலையில் இருக்கிறோம். அதே நேரத்தில் முந்தைய வாழ்க்கைக்கு இன்னும் பாதை எளிதாக இல்லை. ஆனால் நாம் நமது சுகாதார பதிலளிப்பில் கொண்டிருந்த உறுதியும், கவனமும் நமது பொருளாதார மறுகட்டமைப்பிலும் இருக்க வேண்டும்.

வேலைகள் செய்யப்படாத நிலையில், இது ஒரு மைல்கல் என்பதை மறுப்பதற்கு இல்லை. எனவே நன்றி நியூசிலாந்து என்று கூறி முடிக்கிறேன்”.

இதுதான் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் சொன்னது.

நியூசிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் விடை பெற வழிவகுத்த திட்டம் தீட்டி செயல்படுத்திய பெண் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

இதேபோன்று இலங்கையும் கொரோனாவுக்கு முற்றிலுமாய் விடை கொடுக்கும் நாள் எப்போது வரும்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி