கடந்த வருடத்தில் மாத்திரம், சுமார் 20,000 மாணவர்கள் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தியுள்ளனர் என்றும் மேலும் சுமார் 80,000 சிறுவர்கள்
பாடசாலைக் கல்வியை முறையாகத் தொடரவில்லை எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
சமூகத்தில் பேசப்படும் பல சமூகப் பிரச்சினைகள் இக்குழுவினாலேயே உருவாகின்றனவோ என்ற சந்தேகம் நிலவுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி சீர்திருத்தங்கள் இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கல்வி மாற்றங்கள் படிப்படியாகவும் நெகிழ்வான செயல்முறையாகவும் செயல்படுத்தப்படும் என்றார் அவர்.
மாகாணக் கல்வி அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், கல்வி சீர்திருத்தங்களைச் சூழ்நிலைக்கேற்ப நடைமுறைப்படுத்துவது மிகவும் முக்கியம் என குறிப்பிட்டார்.
பாடப்புத்தகங்களுக்கு பதிலாக தொகுதி முறை அறிமுகம், சுயபடிப்பு, நடைமுறை செயல்கள், தனிப்பட்ட மதிப்பீடுகள், பாட பரீட்சை மற்றும் மதிப்பீட்டு முறை மாற்றம், மாணவர்களின் திறன்கள் மற்றும் விருப்பங்களை அடிப்படையாகக் கொண்டு பாடத்தேர்வு ஆகியவை குறித்து கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“தற்போதைய கல்வி முறையில் மாற்றம் தேவை என்பதில் எவருக்கும் ஐயமில்லை. இது வெறும் பாடத்திட்ட மாற்றமாக இருக்கக் கூடாது. முழு கல்வி அமைப்பிலும் ஆழமான மாற்றம் தேவை. இந்த சீர்திருத்தங்கள் முதற்கட்டமாக 2026ஆம் ஆண்டு 1ஆம் வகுப்பு மற்றும் 6ஆம் வகுப்பில் தொடங்கப்படும்.”
“போட்டித் தேர்வுகளை இலக்காக்கும் கல்வி முறை நாடு எதிர்கொள்ளும் சமூக சவால்களுக்கு தீர்வல்ல. பதவி, பங்கு மற்றும் பொறுப்புணர்வு கொண்ட குடிமக்களை உருவாக்குவதே நம் குறிக்கோள். அதனை அடைய புதிய மதிப்பீட்டு முறைகள் அமலாக்கப்படும்” எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தக் கல்வி மாற்றங்கள் எதிர்காலத் தலைமுறைகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையுடன், அமைச்சகம் திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.