(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில்
தேசிய மக்கள் சக்தி (திசைகாட்டி) சார்பாக திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்ட அபூபக்கர் ஆதம்பாவா 23,075 வாக்குகளைப் பெற்றும் நாடாளுமன்றம் செல்ல முடியாதிருந்தது.
இந்நிலையில், தேசியப் பட்டியல் ஊடாக அவரது பெயர் தெரிவு செய்யப்பட்டமையைக் கொண்டாடும் முகமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) இரவு சாய்ந்தமருதூரில் பிரதான வீதி எங்கும் பட்டாசு கொளுத்தி மக்கள் சந்தோஷ ஆரவாரத்துடன் ஈடுபடுபட்டனர்.
தேசியப்பட்டியல் மூலமாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அபூபக்கர் ஆதம்பாவா, தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயம் மற்றும் கல்முனை சாஹிராக் கல்லூரியிலும் கற்று, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் உயிரியல் இளங்கலை பட்டம் பெற்றார்.
கல்வியில் முதுகலை பட்டதாரி மற்றும் அனர்த்த முகாமைத்துவம் சம்பந்தமான பட்டம் பெற்றுள்ள இவர், இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதித் தலைவராவார். தற்போது கல்முனை கார்மேல் பத்திமா கல்லூரியில் உயிரியல் ஆசிரியராக கடமையாற்றுகின்றார்.
தற்போது தேசிய மக்கள் சக்தியின் கல்முனை தொகுதி அமைப்பாளரும் தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் செயற்படுகிறார்.


