கடந்த 42 நாட்களாக நாட்டை ஆட்சி
செய்தது போன்று தற்போதைய அரசாங்கம் ஆட்சியை தொடர்ந்தால், ஒரு வருடத்திற்குள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான எரிவாயு சிலிண்டர் சின்னம் கொண்ட குழு நாட்டின் ஆட்சியை கைப்பற்ற நேரிடும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
கண்டி "கரலிய" பொது கேட்போர் கூடத்தில் நேற்று (31) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எட்டாவது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த பேரணி இடம்பெற்றது.
மேலும் கருத்து தெரிவித்த அனுராத ஜயரத்ன,
'' தற்போதைய அநுர திஸாநாயக்க நிர்வாகம் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டம், பிரிக்ஸ் உச்சி மாநாடு போன்ற முக்கியமான சர்வதேச உச்சி மாநாடுகளை தவிர்க்கும் கொள்கையை பின்பற்றுகிறது.
இதே கொள்கையை எதிர்காலத்தில் பின்பற்றினால் இந்த நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க சர்வதேச சமூகத்தின் ஆதரவு கிடைப்பது சந்தேகமே.
இந்த நாட்டின் இருபத்தி இரண்டு மில்லியன் மக்களின் தலைவராக அநுர திஸாநாயக்க ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என்றாலும், அதனை அவர் மறந்து விட்டார். அப்போது 3 சதவீதத்தினருக்கு தலைமைப் பொறுப்பை வழங்கிய எதிர்க்கட்சி உறுப்பினர் போலவே இன்றும் நடந்து கொள்கிறார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது கண்டியில் நடைபெற்ற பேரணியில் முக்கிய விடயம் ஒன்றைக் குறிப்பிட்டேன். அதாவது, எழுதி வைத்துக் கொள்ளுங்கள், இன்னும் ஆறு மாதங்களில் ரணில் விக்கிரமசிங்கவே இந்த நாட்டின் ஜனாதிபதியாக வருவார்'. 40 நாட்களுக்கு முன்பு செங்கடகலையில் அமர்ந்து நாங்கள் கூறிய அந்தக் கதையை இந்த அரசு உறுதிப்படுத்துகிறது என்றார்.