கொழும்பு, கிராண்ட்பாஸ்
பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மயானம் ஒன்றுக்கு முன்பாக முச்சக்கரவண்டியில் சென்ற நபரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை கொழும்பு குற்றப் பிரிவினர் நேற்று (31) கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் ஹெந்தல, வத்தளை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவரார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாதம்பிட்டிய மயானத்துக்கு முன்பாக காரில் வந்த இனந்தெரியாத சிலர் முச்சக்கர வண்டியில் சென்ற நபர் ஒருவரைக் சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸாரும் கொழும்பு குற்றப் பிரிவினரும் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இதன்படி, சந்தேக நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்த வந்த காரை ஓட்டிச் சென்ற 35 வயதுடைய புளூமெண்டல் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கடந்த ஒக்டோபர் 28ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் வத்தளை பகுதியில் வைத்து இரண்டு கையடக்கத் தொலைபேசிகளுடன் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளின் போது, சந்தேக நபர் வெளிநாடுகளில் திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும், அந்த நபரின் வழிகாட்டலின் பேரில் இந்தக் குற்றம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கிராண்ட்பாஸ் பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.