ஈழத்தமிழர்களின் வரலாற்றை
மாற்றும் முயற்சியில் இனத்துரோகிகள் சிலர் ஈடுபட்டுள்ளனர் அத்தகையவர்களின் கருத்துத் திணிப்புகள் தொடர்பில் இளைய தலைமுறையினர் அவதானமாக இருக்க வேண்டும் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி - வட்டக்கச்சி வட்டாரத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது,
எமது இனத்தின் இருப்புக்கான அடிப்படைக் கட்டமைப்புகள் அத்தனையையும் நீண்டகால நோக்கோடும், நிபுணத்துவ ஆற்றலோடும் நிறுவிய தமிழீழ விடுதலைப் புலிகளின் சிந்தனையிலும் செயல்நோக்கிலும் உருவாக்கம் பெற்றது தான், அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம்.
ஆனால், அதன் உருவாக்கத்தில் ஒரு துரும்பைத்தானும் அசைத்திராத, வடக்கிலுள்ள முன்னாள் அமைச்சர் ஒருவர், அத்தகைய வரலாற்றுப் பெரும்பணிக்கு தற்போது உரிமைகோரி வருகிறார். எங்களது வரலாறுகளை மறைத்தும் திரித்தும் வரும் இத்தகைய இனத்துரோகிகள் தொடர்பில் எமது மக்களும், இளைய தலைமுறையினரும் விழிப்பாய் இருக்க வேண்டும் என்றார்.