(அபு அலா)
கல்முனை மாநகர சபையின்
முதல்வராக இருந்த காலத்தில் எமது சபையை ஒரு ஊழல்களற்ற மாநகர சபையாகவும் நாட்டிலுள்ள சபைகளைவிட சிறந்தொரு சபையாக மாற்றியமைத்த பெருமை எனக்கும் உங்களுக்கும் உள்ளது என்று, கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் திகாமடுல்ல மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 3 ஆம் இலக்க வேட்பாளரும் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது பொதுத்தேர்தல் காரியாலய திறப்பு விழா கட்சியின் 3 ஆம் இலக்க வேட்பாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நேற்றிரவு (30) திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீங்கள் தந்த அமானிதத்தின் மூலம் எனக்குக் கிடைத்த முதல்வர் பதவியின் ஊடாக, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உதவிகளைப் பெற்றுக்கொண்டு கல்முனை மாநகரத்தை பல்வேறுபட்ட அபிவிருத்திப் பாதையில் கொண்டு சென்றதை நீங்கள் அறிவீர்கள்.

இன மத வேறுபாடின்றி வாழ்வாதார உதவிகள், பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், விளையாட்டுக் கழகங்களுக்கான உபகரணங்கள், திண்மக் கழிவகற்றல் முறையில் எவ்வித தடைகளுமின்றிய நடைமுறை போன்ற பல்வேறுபட்ட விடயங்களைச் செய்ய ஒரு பம்பரம் போன்று இயங்கி வந்ததையும் கண்ணூடாகக் கண்டீர்கள்.
எனது இந்த சேவையை அம்பாறை மாவட்டத்திலுள்ள எல்லா மக்களுக்கும் வழங்க வேண்டும் என்ற சிந்தனையில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும், அதன் தலைமையும் முடிவெடுத்து இத்தேர்தலில் என்னை களம் இறக்கியுள்ளது.

அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து இன மக்களுக்கும் இன மத வேறுபாடின்றிய சேவைகளை வழங்கி வைக்க ஒரேயொரு சந்தர்ப்பத்தைத் தாருங்கள் என்று நான் கேட்கிறேன். எனக்கு 20 வருடங்கள் வேண்டாம். எனது செயற்பாடுகளையும், வேலைத்திட்டங்களையும் நீங்கள் அவதானித்து அதன் பின்னர் முடிவெடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.