கட்டுநாயக்க பண்டாரநாயக்க
விமான நிலையத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என பொய்யான தகவலை வழங்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரை நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
வாரியபொல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரும் அவரது தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
30 வயதுடைய சந்தேக நபர் மனநோயால் பாதிக்கப்பட்டவர். அவரது தந்தை இந்திய திரைப்படங்களைப் பார்த்து ஈர்க்கப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
அண்மையில் (27) கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டதுடன், விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என விமான நிறுவனத்தின் முகாமையாளருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில், அது பொய்யானது என்றும், வெடிகுண்டு பீதியை ஏற்படுத்தியதும் தெரிய வந்தது.
எவ்வாறாயினும், அழைப்பை வழங்கிய நபரைக் கண்டுபிடிக்க நடத்தப்பட்ட விசாரணைகளின்படி, சந்தேகத்தின் பேரில் தந்தை மற்றும் மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். குழப்பத்தை ஏற்படுத்தி வேடிக்கை பார்க்கும் நோக்கில் இதனைச் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், 30 வயதுடைய சந்தேக நபர் சில மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் மேலதிக விசாரணைகளுக்காக மனநல மருத்துவரிடம் பரிந்துரைக்கப்படவுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எரிக் பெரேராவின் பணிப்புரையின் பேரில், நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.