நியூயோர்க்கில் சர்வதேச நாணய
நிதியத்துடன் அரசாங்கம் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் உண்மை நிலையை ஜனாதிபதி உடனடியாக நாட்டுக்கு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் முன்வைக்கும் அனைத்து யோசனைகளையும் நடைமுறைப்படுத்தினால் வரவு - செலவுத் திட்ட இடைவெளி 2,500 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கலாம் என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, மீண்டும் வரிசைகள் வருமா? பணவீக்கம் அதிகரித்து வருகிறதா? ரூபா மதிப்பு குறையுமா? மேலும் வட்டி அதிகரிக்குமா என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் கொழும்பு மாவட்ட வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் முகமாக அதுருகிரியில் நேற்று (28) நடைபெற்ற கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு மேலும் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,
நமது பட்ஜெட் இடைவெளி 2500 பில்லியனாக உயர்ந்தால் நாட்டின் கதி என்ன? முடிவுகளைச் சொல்லத் தேவையில்லை? முதலில் தற்போதைய நிலைமையை நாட்டுக்கு சொல்லுங்கள்.
எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுமாயின் அவற்றை எவ்வாறு கையாள்வது எனத் தெரிந்தவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புமாறு மக்களுக்கு நான் கூறுகிறேன்.
வரவு - செலவுத் திட்டம், ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பற்றிக் கூடத் தெரியாதவர்கள் பாராளுமன்றத்துக்கு அனுப்பப்படுகிறார்களா என்றும் கேள்வியெழுப்பினார்.