வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்
பலர் நாட்டில் தங்கியிருந்த பிரதேசத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என பயங்கரவாத விசாரணைப் பிரிவு கொழும்பு நீதிவான் நீதிமன்றில் அறிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான அறிக்கையை முன்வைத்து கொழும்பு மேலதிக நீதிவான் பசன் அமரசேனவிடம் பொலிஸார் இந்த உண்மைகளை தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான சந்தேகத்துக்கிடமான ஏனைய நபர்கள் தொடர்பிலான தகவல்கள் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக உண்மைகளை வெளிக்கொணரும் வகையில் சிறையில் உள்ள சந்தேக நபர்கள் பலரிடம் விசாரணைகள் மற்றும் வாக்குமூலங்களை பதிவு செய்ய அனுமதிக்குமாறும் பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிவான், விசாரணைகளின் முன்னேற்றத்தை எதிர்காலத்தில் தெரிவிக்குமாறு உத்தரவிட்டார்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் கடந்த செப்டெம்பர் மாதம் கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.