(பாறுக் ஷிஹான்)
எங்களை சொந்த நாட்டினுள்
அகதிகளாக வைத்திருக்க வேண்டாம். நினைவேந்தலுக்கு ஒரு விளக்கும் கூட கொளுத்தாதவர்கள் இன்று தேர்தலில் நிற்கிறார்கள்.இலங்கை தமிழரசுக் கட்சியில் தும்புத் தடியை நிறுத்தினாலும் மக்கள் வாக்களிப்பார்கள் என்ற மடைமைத்தனமான சிந்தனை இன்று மலையேறிவிட்டது. இம்முறை தேர்தல் அதற்கு சாட்சி பகரும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் வைத்தியர் இராஜகுமார் பிரகாஷ் தெரிவித்தார்.
அம்பாறை ஊடக மையத்தில் பொதுத்தேர்தல் மற்றும் சமகால அரசியல் தொடர்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில்
எங்களை சொந்த நாட்டினுள் அகதிகளாக வைத்திருக்க வேண்டாம்.எங்களுக்கும் இந்த நாட்டில் வாழ்வதற்கு உரிமை உள்ளது.இந்த நாட்டில் நாங்களும் ஏனையோர் போன்று உரிமைகளைப் பெற வேண்டும்.
நாங்கள் கடந்த 25 வருடங்களாக மக்களோடு மக்களாக பயணிப்பவர்கள். அரசியலுக்கு நாங்கள் புதிதாக குதித்தவர்கள் அல்லர்.கோடிக்கணக்கில் பணத்தை நாங்கள் செலவழிக்கவில்லை. அதற்கு எம்மிடம் பணமும் இல்லை. எங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை தாருங்கள்.எப்போதும் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து பயணிக்க தயாராக உள்ளோம்.எமது தமிழ் மக்களை பிழையாக வழிநடத்த வேண்டாம் என்று இரு கரம் கூப்பி எமது அரசியல்வாதிகளிடம் வேண்டுகின்றேன்.
தமிழரசுக்கட்சியை நாங்கள் விமர்சிக்க வரவில்லை.அக்கட்சி எமது தாயக கட்சி.தமிழ் தேசிய கொள்கையை எமது உள்ளம் ஏற்று ஏக்கத்துடன் பயணிக்கிறது. அக்கட்சியை ஒரு சில நபர்கள் பிழையாக வழிநடத்துகின்றார்கள். அவர்களது தலைக்கணத்தை உடைப்பதற்கே அணியாக நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம். நாங்கள் காலில் விழாத குறையாத எந்த ஒரு விட்டுக்கொடுப்புடனும் அக்கட்சியுடன் அம்பாறை மாவட்டத்தில் இணைந்து பயணிக்க தயாராகத் தான் இருந்தோம். ஆனால் வீட்டில் ஒரு தும்புத்தடியை நிறுத்தினாலும் வெல்வோம் என்ற மடைமைத்தனமான சிந்தனையை வைத்துக் கொண்டு சிலர் பயணிக்கின்றனர்.
தந்தை செல்வநாயகம் விதைத்த தமிழ் தமிழ் தேசியம் இன்னும் எங்களது உள்ளத்தில் ஏக்கத்துடன் காணப்படுகிறது .நாங்கள் அக்கட்சியை விமர்சிக்கவில்லை. ஆனால் அதில் உள்ள ஓரிரு தலைவர்களின் செயற்பாடுகள்தான் இன்று அது இந்தளவு மோசமாக நிலைமைக்கு போனதுக்கு காரணம் என்றார்.