கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகம்
எதிர்கொண்ட பல்வேறு பிரச்சினைகளின்போது துணிச்சலாக களம் இறங்கி எதிர்த்து நின்று, சமூகத்தைப் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை முஸ்லிம் காங்கிரஸ் செய்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.
கண்டி, இனிகலையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசார ஒன்றுகூடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது,
முன்னாள் அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீத் இந்த மாவட்டத்தில் 40 வருடங்களாக அரசியல் செய்தவர். 1994 இல் தேசியப் பட்டியலில் பாராளுமன்றத்திற்கு நான் தெரிவு செய்யப்பட்ட பின்னர் ,2000 ஆம் ஆண்டு முதன்முதலாக கண்டி மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டபோது, துரதிர்ஷ்டவசமாக அதற்கு முந்திய வருடம் அவர் காலம் சென்றிருந்தார்.
2000ஆம் ஆண்டில் நான் கண்டி மாவட்டத்தில் மரச் சின்னத்தில் போட்டியிட்டபோது நான் வெற்றி பெறுவேன் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
இறைவனின் உதவியால் அந்தத் தேர்தலில் நான் வெற்றி பெற்ற போதும் எங்கள் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் ஹெலிகொப்டரில் பயணித்துக் கொண்டிருந்தபோது மரணிக்க நேர்ந்தது. அந்த பெரும் தலைவர்கள் இருவரும் இரண்டு வருடங்களுக்குள் மரணித்தமை பெரும் மனப்பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
நான் 30 வருடங்களாக பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கிறேன். இந்த 30 வருடங்களில் நான் கண்டி மாவட்டத்துக்கு எதையுமே செய்யவில்லை என்று சிலர் பொய் குற்றம் சாட்டுகின்றனர். நான்செய்த வேலைகளை குறிப்பிடுவதாக இருந்தால் பெரிய பட்டியல் ஒன்றே போடலாம்.
அதில் ஒன்றை மட்டும் குறிப்பிடுவதாக இருந்தால், நீர்வழங்கல் அமைச்சராக நான் இருந்தபோது, 52 ஆயிரம் மில்லியன் ரூபா சீனாவிடம் இருந்து கடன் பெற்று, ஆரம்பிக்கப்பட்டு, அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைக் கொண்டு திறந்துவைத்த குஹாகொடை நீர்சுத்திகரிப்பு நிலையத்தைக் குறிப்பிடலாம். இது அக்குறணைக்கும் அப்பால் அங்கும்புறை வரை குடிநீர் வழங்கும் ஆற்றலைக் கொண்டது. இப்பிரதேசத்தில் குடிநீர் வசதியே அற்ற குக்கிராமங்கள் வரை குடிநீர் வழங்கல் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளேன். சுமார் 16 நீர் வழங்கல் திட்டங்களை நான் கண்டி மாவட்டத்தில் மாத்திரம் நடைமுறைப்படுத்தி யுள்ளேன். இவ்வாறாக அமைச்சுப் பதவியில் இருந்த காலங்களில் நான் ஏராளமான செயற்திட்டங்களை இப்பகுதியில் முன்னெடுத்துள்ளேன் என்றார்.