மாத்தறை பாலடுவ பிரதேசத்தில்
சட்டவிரோதமான முறையில் ரிவோல்வர் ரக துப்பாக்கிகள் தயாரிக்கப்படும் இடம் சுற்றிவளைக்கப்பட்டு சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, 9 மி.மீ ரவைகள் கொண்ட 5 தோட்டாக்கள், 1 வெல்டிங் இயந்திரம் மற்றும் சில உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளை சந்தேக நபர், ஒரு தொகைக்கு விற்பனை செய்துள்ளதாக ஆரம்பககட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக கூறப்படும் இரு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அஹங்கம பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இவர்கள் 47 மற்றும் 54 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்களுடன் ஆயுதங்களும் மாத்தறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலதிக விசாரணைகளை மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.