உயிர்த்த ஞாயிறு அறிக்கைகளை
மேற்கோள்காட்டி அரசியல் செய்ய வேண்டாம் என அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த அறிக்கை கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது தமக்கு கிடைத்ததாகவும், ஆனால் ஈஸ்டர் தாக்குதலை அரசியலுடன் இணைக்கத் தயங்கியதன் காரணமாக அந்த அறிக்கைகளை பகிரங்கப்படுத்துவதிலிருந்து விலகியதாகவும் அவர் கூறுகிறார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள முழுமையான அறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
“இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நான் பதவியேற்ற பின்னர், கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் பிஷப் ஹரோல்ட் அந்தோனி பெர்னாண்டோவின் வேண்டுகோளுக்கு இணங்க ஈஸ்டர் ஆணைக்குழு அறிக்கைகளை அவரிடம் கையளித்தேன்.
அதன் பின்னர், கத்தோலிக்க ஆயர்கள் பேரவை பல தெளிவுபடுத்தல்களை முன்வைத்திருந்ததுடன், எனக்கு அனுப்பப்பட்ட அனைத்து விளக்கங்களையும் சட்ட மா அதிபருக்கு அனுப்பி, அது தொடர்பான அனைத்து விடயங்களையும் ஆயர்கள் பேரவையுடன் பரிமாறிக் கொள்ளுமாறு சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டது.
செனல் 4 இல் ஒளிபரப்பப்பட்ட அம்பலப்படுத்தல்களை ஆராயுமாறு என்னிடம் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. நான் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ. இமாம், முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ஜயலத் வீரக்கொடி மற்றும் உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஹர்ஷ ஷோசா ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மேலதிகமாக, ஏ.எம்.ஜே. டி அல்விஸ்,டபிள்யூ.எம்.ஏ.என்.நிஷான் மற்றும் கே.என்.கே. சோமரத்ன மற்றுமொரு மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்தார். இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டவர்கள் யாரும் எனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்கள் அல்லர்.
இந்தக் குழுக்களுக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆதரவை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மேற்கூறிய குழுவை நியமித்ததன் நோக்கங்களில் ஒன்று, இந்திய உளவுத் துறைக்கு எந்த வகையான பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தாலும் அது பற்றிய தகவல் கிடைத்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வது. மேலும், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக உள்ளதா என்று விசாரிப்பது இந்தக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள மற்றொரு பொறுப்பு.
அல்விஸ் குழு அறிக்கையானது அப்போதைய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரும் தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான ரவி செனவிரத்ன, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோரை பழிவாங்குவதற்காக தயாரிக்கப்பட்ட அறிக்கையல்ல.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அப்துல் லத்தீப் உள்ளிட்ட வர்கள் தொடர்பிலும் அந்த அறிக்கை மேலும் பரிந்துரைத்துள்ளது என அந்த அறிக்கையில் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.