இலங்கையில் தவறிழைப்பவர்கள்

சட்டத்திற்கு முன் நிறுத்தப்படாத கலாச்சாரம் தொடர்வதே அந்த நாட்டில் பல பிரச்சினைகளுக்கு மூல காரணமாக அமைந்துள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகரின் முன் அறிக்கை அழுத்தமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனீவா ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அறிக்கை அந்த உயர்ஸ்தானிகரால் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அவரது இறுதி அறிக்கைக்கு முன்னரான அறிக்கை நேற்று (ஓகஸ்ட் 22) வெளியானது.
 
இலங்கையில் தொடர்ச்சியாக நடைபெறும் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறல் இல்லாத சூழல் மென்மேலும் அப்படியான மீறல்களுக்கு வழிவகுக்கிறது என்பதை மீண்டும் நினைவுகூர்ந்துள்ளார். இலங்கையில் செபடெம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதை கவனத்தில் எடுத்துள்ள மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகரின் வோகர் டர்க் (Volker Türk) இலங்கை தொடர்பான தனது இறுதி அறிக்கைக்கு முன்னரான அறிக்கையில், பதவிக்கு வரும் ஜனாதிபதி, அனைவரையும் அரவணைத்து நல்லிணக்கத்தை பேண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
 
”தேர்தலை அடுத்து புதிதாகத் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி - ஓர் அவசர விடயமாக - இலங்கை நாட்டுக்கென அனைவரையும் அரவணைக்கும் ஒரு தேசிய நோக்கினை முன்னெடுத்தல் வேண்டும். அந்நோக்கு முரண்பாட்டுக்கான மூல காரணங்களைக் கவனத்திலெடுத்து, ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதற்கும், அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதற்கும், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை மேம்படுத்துவதற்கும் தேவையான அடிப்படையான அரசியல் யாப்பு மற்றும் நிறுவனரீதியான சீர்திருத்தங்களை முன்னெடுத்தல் வேண்டும்.”
 
நாட்டில் போதைப் பொருட்களை ஒழிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் தொடர் கைதுகள் நிறுத்தப்பட்டு, அவ்வகையில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என அவரது அறிக்கை கோருகிறது.
 
“யுக்திய செயற்றிட்டத்தை நிறுத்தி இந்த செயற்பாட்டின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து நபர்களையும் விடுதலை செய்ய வேண்டும். மேலும், போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளித்து, சமூக ரீதியிலான விழிப்புணர்வை ஏற்படுத்தி போதைப் பொருட்கள் பாவனையால் ஏற்படும் தீங்குகளைக் குறைக்கும் பொருட்டு அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும், அத்தோடு போதைப் பொருட்கள் ஒழிப்பு தொடர்பான கொள்கை மனித உரிமைகள் மற்றும் பொது சுகாதாரத்தை மையப்படுத்தி, அவை தொடர்பில் சர்வதேச வழிகாட்டல் நெறிமுறைகளுக்கு அமைவாகவும் இருக்க வேண்டும்”.
 
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலும், நாடாளுமன்ற தேர்தலும் இடம்பெறவுள்ள நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு பரந்துபட்ட அளவில் போராட்டங்களில் ஈடுபட்ட அனைத்து தரப்பினராலும் கோரப்பட்ட அடிப்படை மாற்றங்களை கொண்டுவருவதற்கு மீண்டும் உறுதி ஏற்க இந்த தேர்தல்கள் ஒரு வாய்ப்பாக உள்ளதாக என்றும் வோகர் டர்க்கின் அறிக்கை கூறுகிறது.
 
”தேர்தல்களை நோக்கி நாடு செல்லும் நிலையில், தேர்தலுக்கு முன்னர், தேர்தல் காலம் மற்றும் அதற்கு பின்னரும் மனித உரிமைகளை மதித்து நடப்பது, கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பது, அமைதியான வழியில் ஒன்றுகூடுவது, போராடுபவர்கள் மீது அதிபடியான பலத்தை பிரயோகிப்பது ஆகியவற்றை தவிர்ப்பது போன்றவைகளில் அரசுக்கு ஒரு பொறுப்புள்ளது. அது மாத்திரமன்றி சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்துகின்ற வகையில் மத மற்றும் பாலியல் ரீதியாகவோ அல்லது இதர காரணங்களுக்காக உணர்ச்சிவசப்பட்டு பேசுவது போன்றவை தடுக்கப்பட வேண்டும். மேலும், தேர்தல் தொடர்பான அல்லது ஏனைய மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் இடம்பெறாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.”
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 57ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள உயர்ஸ்தானிகரின், இலங்கைத் தொடர்பான இறுதி அறிக்கைக்கு முன்னரான அறிக்கையில், நாட்டில் எந்த தவறுகளையும் இழைத்துவிட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதிலிருந்து தப்பிக்கலாம் அல்லது சட்டத்தின் முன்னர் நிறுத்தபடாமலேயே இருக்க முடியும் என்ற கலாச்சாரம் புறையோடிப் போயுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
 
இலங்கையில் கடந்த காலங்களில் மாத்திரமல்ல நிகழ்காலத்திலும் அனைத்து மட்டங்களிலும் இடம்பெறும் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறும் நடைமுறை இல்லாததே இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்களுக்கு அடிப்படை காரணமாக உள்ளது எனவும், வோகர் டர்க்கின் அறிக்கை கூறுகிறது. அதிலும் குறிப்பாக பாரிய மனித உரிமை மீறல்கள் அல்லது அட்டூழியங்களைச் செய்தவர்கள் என குற்றஞ்சாட்டப்படுபவர்கள் பாதுகாப்பு படையின் உறுப்பினர்களாக இருந்தால் இந்த பொறுப்புக்கூறல் முற்றாக இல்லாமல் போயுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
திட்டமிட்ட வகையில் அல்லது உள்நோக்கத்தோடு இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில், அதை செய்தவர்கள் பாதுகாப்புப் படையினராக இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது வழக்கு தொடுத்து, சட்டத்தின் முன் நிறுத்தி, நீதியை நிலைநாட்டும் நடவடிக்கை எடுக்க இலங்கை  அரசுக்கு விருப்பமின்மை அல்லது திறனற்ற நிலைமை காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தவறிழைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத புரையோடிப்போயுள்ள கலாச்சாரமே ஊழலாக மாறியும், அதிகார துஷ்பிரயோகமாக உருவெடுத்தும், அரசின் தோல்விகளுக்கு வழிவகுத்துள்ளன. அவையே நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளுக்கு அடிப்படை காரணிகள் எனவும் அந்த அறிக்கையில்  வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
இதற்கு அப்பாற்பட்டு ஐ நா மனித உரிமைகள் பேரவை மற்றும் அதன் உறுப்பு நாடுகளுக்கு இலங்கை தொடர்பில் சில பரிந்துரைகளையும் அவர் முன்வைத்துள்ளார். அதில் பிரதானமாக சர்வதேச குற்றங்களை இழைத்ததான குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள அனைத்து தரப்பினரையும், தேசிய நீதிபரிபாலன வழிமுறைகள் ஊடாக வழக்கு தொடுத்து நீதிமன்றாத்தில் நிறுத்த விசாரணை அமைப்புகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
 
அவ்வாறு செயற்படும்போது தேசிய அதிகார வரம்புகளில், ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் இலங்கைக்கு வெளியேயோ அல்லது சர்வதேச வலையமைப்புகளின் ஊடன அதிகார வரம்புக்கு உட்பட்டும், பரஸ்பர சட்ட வழிமுறைகள் மற்றும் உதவிச் செயற்பாடுகள் மூலமும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும், அதன் போது மோதல்களில் உயிர் பிழைத்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் அல்லது அவர்களின் பிரிதிநிதிகள் ஆகியோரின் ஒத்துழைப்புகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
 
இவை மாத்திரமின்றி பொறுப்புக் கூறல் விடயத்தில் சர்வதேச சட்ட வழிமுறைகளையும் ஐ நா மனித உரிமைகள் பேரவை மற்றும் அதன் உறுப்பு நாடுகள் ஆராய வேண்டும் எனவும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் வோகர் டர்க் தனது இறுதி அறிக்கைக்கு முன்னரான அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி