பசியோடு இருந்த மக்களின்

துன்பத்தைக் கண்டு, நாட்டைப் பொறுப்பேற்று அந்த மக்களின் பசியைப் போக்கியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாட்டைப் பொறுப்பேற்க எவரும் முன்வராத பட்சத்தில் தான் நாட்டைப் பொறுப்பேற்ற பின்னர் வீடுகளில் முடங்கியிருந்த மக்களும், இளைஞர்களும் வெளிவந்து நடக்க ஆரம்பித்ததாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இரண்டு வருடங்கள் கடந்துள்ளதால் மக்கள் அந்தத் துன்பங்களை மறந்திருக்கக் கூடும் என்றும், எனினும், அவ்வாறானதொரு நிலைக்கு மீண்டும் செல்லாதிருக்க சிந்தித்து வாக்களிக்குமாறும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸ்  மாநாடு நேற்று (23) பிற்பகல் அக்கறைப்பற்று  நீர்ப்பூங்காவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநாட்டில்  உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

"இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரகடனம் குறித்து கவனம் செலுத்துவேன். எனக்கு  ஆதரவு தந்தமைக்கு நன்றி. பசிக்கு இனமோ மதமோ கிடையாது. அதேபோல் கட்சியும் இல்லை. இப்படியான தருணத்தில் நாட்டை பற்றியே சிந்திக்க வேண்டும். நான் நாட்டை ஏற்ற போது, கேஸ், அரிசி, உரம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இருக்கவில்லை. பெரும்போகத்திற்கும் சிறுபோகத்திற்கும் உரமின்றி விவசாயிகள் வீதியில் இறங்கினர்.
 
மக்களின் பசியை போக்க வேண்டியிருந்தது. நான் ஜனாதிபதியான பின்னரான எல்லா போகத்திலும் அறுவடை கிடைத்தது. 2025 ஆம் ஆண்டு சிறுபோகத்திலும் நல்ல அறுவடை கிடைக்குமென நம்புகிறோம். கேஸ், எரிபொருள் தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்தோம்.  மக்கள் சுமூகமாக வாழ ஆரம்பித்தனர். மக்களால் சுதந்திரமாக நடமாட முடிந்தது. வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்த மக்களும் இளையோரும் எழுந்து நடக்க ஆரம்பித்தனர்.

மக்கள் சில நேரம் 2 வருட துன்பங்களை மறந்திருப்பர். அன்று எவரும் நாட்டை ஏற்க முன்வரவில்லை. அப்போது நான் எதிர்கட்சித் தலைவராகவும் இருக்கவில்லை. அப்போது எனது கட்சியிலும் நான் மட்டுமே எம்.பியாக இருந்தேன். மக்கள் பசி எனக்கு புரிந்தது. இளையோரின் எதிர்பார்ப்புக்களும் புரிந்தது. அதனால் நாட்டையும் நாட்டின் முன்பிருந்த சவால்களையும் துணிந்து ஏற்றுக்கொண்டேன். முன்னாள் பிரதமர் என்ற வகையில் அது எனது கடமை என்று கருதினேன்.

நான் ஏற்ற நாட்டை முன்னோக்கி கொண்டுச் சென்றேன். அப்போது நாட்டை ஏற்க  வராதவர்கள் இப்போது என்னை துரோகி என்கின்றனர். அப்போது சஜித் எங்கிருந்தார் .அன்று ஓட்டத்தை ஆரம்பித்தவர் பெரிஸ் ஒலிம்பிக் வரையில் ஓடி முடித்தார். பிரச்சினையை தீர்க்கும் வலுவற்றவர்கள் இப்போது என்னால் முடியாது என்று சொல்வது வேடிக்கையானது. அநுரவை பற்றி பேசுவதில் பிரயோசனம் இல்லை.

எனவே, நாம் அனைவரும் ஒன்றுபட்டு நாட்டைக் கட்டியெழுப்புவோம். அன்றைய நிலையை விட இன்று நல்ல நிலைமை உருவாகியுள்ளது. பொருட்களின் விலையை குறைக்க வேண்டியுள்ளது. ரூபாயை பலப்படுத்தினால் அது தானாகவே நடக்கும்.

2023 ஆம் ஆண்டு மொத்த தேசிய உற்பத்தியை 84 டொலர்களாக அதிகரிக்க முடிந்தது. பணவீக்கம் 10 சதவீதமாக குறைந்தது. 300 ரூபா வரையில்  டொலரின் பெறுமதி குறைந்தது. பொருட்களின் விலை குறைந்தது. உற்பத்தியை 89 பில்லியனாக அதிகரிக்க வேண்டும். 95 பில்லியனாக்குவதே இலக்காகும். அதனால் ரூபா வலுவடைந்து, நிவாரணமும் கிடைக்கும். அது தவிர்ந்த வேறு வழிகள் எமக்கு இல்லை.

இதன்போது ஐ.எம்.எப் எமக்கு உதவியது. அவர்களின் வேலைத் திட்டத்தின் கீழ் இலக்கை நோக்கிய பயணம் இருந்தது. பணம் அச்சிடவோ, கடன் பெறவோ முடியாத நிலை இருந்தது. வரியை அதிகரித்து வருமானத்தை அதிகரித்தோம். அதனை விருப்பத்தோடு செய்யவில்லை. அதனால் பொருளாதாரம் வலுவடையும் என்பதை முன்பே அறிந்திருந்தேன். ரூபாயின் பெறுமதி அதிகரிக்கும் என்பதையும் அறிந்திருந்தேன். அது சாத்தியமானது.

இந்த ஒப்பந்தங்களை சஜித் மீறினால் என்னவாகும்? திருத்தம் செய்ய வேண்டும் என்கிறார்கள். அதனால் எமக்கான உதவிகள் கிடைக்காமல் போகும். டொலரின் பெறுமதி 400 வரையில் அதிகரிக்கும். சிலவேளை 450 ஆகவும் அதிகரிக்கலாம். பணம் இன்றி எரிபொருளும் இன்றி தேங்காய் எண்ணெய் மூலம் வாகனம் செலுத்த வேண்டியிருக்கும். அப்படியொரு நிலை வேண்டுமா?

இங்கிருந்து முன்னோக்கி செல்வதா பின்னோக்கி செல்வதா? நாட்டைக் கட்டியெழுப்ப இன்னும் மூன்று வருடங்கள் தேவைப்படும் இது உங்களது எதிர்காலம். அதைப் பற்றி சிந்தித்து வாக்களியுங்கள். பழைய அரசியலை விட்டுவிடுங்கள். ஒன்றுபட்டு இந்த பிரதேசத்தை முன்னேற்றுவோம். விவசாயம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளை முன்னேற்றுவோம்.  

அனைத்து இன மக்களையும் ஒரே வகையில் பார்க்கிறேன். முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்பட்டதால் அவர்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டனர். அந்த தவறை எனது அரசாங்கம் செய்யவில்லை. இருப்பினும், இலங்கை அரசாங்கம் ஒன்றே அந்த தவறை செய்தது என்ற வகையில் எனது அமைச்சரவையும் நானும் முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கோரினோம். அவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் தீர்மானித்தோம்.  விருப்பமானவர்கள் தகனம் செய்யவும், நல்லடக்கம் செய்யவும், மருத்துவ கல்லூரிகளுக்கு உடல்களை வழங்கவும் தீர்மானிக்கும் சுதந்திரத்தை வழங்குவதற்கான சட்டமொன்றைத் தயாரிக்குமாறு அமைச்சர் அலி சப்ரியிடம் அறிவுறுத்தியுள்ளேன்.

அதனால் எதிர்காலத்தில் பிரச்சினைகள் வராது.  ஹக்கீம், ரிஷாட் போன்றவர்கள் ஏன் அதனை செய்யவில்லை. அனைவரையும் ஒன்றுபடுத்தி அரசாங்கமாக இந்த முடிவை எடுத்தோம். முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பேன். தேசிய காங்கிரஸூம் அதனைச் செய்யும். அச்சம் கொள்ள வேண்டாம். எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டர் கூட இல்லாத வாழ்க்கைக்கு தயாராகுங்கள்." என்று தெரிவித்தார்.  

அமைச்சர் அலி சப்ரி:

கடந்த இரு வருடங்களில் ஒரு மாற்றம் நடந்திருக்கிறது. இந்த தேர்தலில் எவரும் இன மத பேதங்கள் பற்றி பேசவில்லை. ஒற்றுமையாக நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல நினைக்கின்றனர். ரவூப் ஹக்கீமின் முஸ்லிம் காங்கிரஸூம், ரிஷாட் பதியூதீனின் கட்சியும் அரசாங்கத்தில் இல்லாதிருப்பதே அதற்குரிய காரணமாகும். அனைத்து இன மக்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒற்றுமையாக வாழ வழி செய்திருக்கிறார்.

இதனை மாற்ற வேண்டுமா? என்ற கேள்வியே இன்று உள்ளது. தேர்தலை எவர் வென்றாலும் பிரச்சினையில்லை. ஆனால் அதற்கு பின்னர் நாட்டை யார் கட்டியெழுப்புவார் என்ற கேள்வி உள்ளது. கோட்டாவிற்கு 69 இலட்சம் வாக்குகள் கிடைத்தன. அன்றும் நானும் அதாவுல்லாவும் மட்டுமே சமூகத்தின் பாதுகாப்பு கருதி அரசாங்கத்துடன் இருந்தோம். எங்களை குறை சொன்னார்கள். நாம் அந்த அரசாங்கத்தில் இல்லாதிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசிக்கவில்லை. பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்று எவரும் சொல்லவில்லை.

ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டபோது எட்டு பேர் ஒன்று சேர்ந்து அப்போதைய ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சரோடு கலந்துரையாடியதோடு,  இலங்கைக்கு வந்திருந்த இம்ரான் கானுடனும் கலந்துரையாடினோம்.

இப்போது அவர்கள் பலஸ்தீன நாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப் போகிறார்கள். 1988 களிலேயே பலஸ்தீன நாடு ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.  இப்போதும் இவர்கள் பலஸ்தீனை ஏற்பதாக ஒப்பந்தம் செய்வது மக்களை ஏமாற்றும் முயற்சியாகும்.  

மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் அவர்களின் சமூகத்தை கட்டியெழுப்ப கல்வி அமைச்சை கோருகிறார்கள். முஸ்லிம் அமைச்சர்கள் சொந்த பைகளை நிறைக்கவே அமைச்சுகளை கோருகின்றனர்.  ஆனால் அதாவுல்லா மக்களுக்கான பல சேவைகளை செய்திருக்கிறார். அவருக்கு முஸ்லிம் மக்களின் மரியாதை உரித்தாக வேண்டும்.

அரபு நாடுகளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசங்கவிற்கு பெரும் வரவேற்பு உள்ளது.  பலஸ்தீனுக்காக குரல்கொடுக்கும் முஸ்லிம் அல்லாத நாடுகளில் இலங்கைக்கு இன்று உயர்வான இடமுள்ளது. ஐ.நாவிலும் பலஸ்தீனுக்காக நாம் குரல் கொடுத்திருக்கிறோம். இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை காசாவிற்கு வழங்கியது.  மக்களிடமிருந்தும் ஒரு மில்லியன் டொலர்களை வழங்கியது.
காசாவில் பிரச்சினைகள் தீர்ந்த பின்னர் இலங்கை, அங்கு பாடசாலை ஒன்றை அமைத்துக்கொடுக்கவும் தீர்மானித்துள்ளோம். அதனால் ஜனாதிபதியின் வெற்றிக்காக அவரை பலப்படுத்த போகிறோமா அல்லது பொறுப்புக்களை விட்டு ஓடிய சஜித் பிரேமதாசவிற்கு கொடுக்க வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.'' என்றார்.

பாராளுமன்றத்திற்கு உறுப்பினரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லா :

இந்த நாட்டில் ஏற்படும் முரண்பாடுகளினால் காலத்துக் காலம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்திருக்கிறோம். ரணில் விக்ரமசிங்க தனிஒருவராக வந்து தனித்து நின்று பிரதமராகி ஜனாதிபதியாக தெரிவானார். இது ஆண்டவனின் தீர்ப்பு என்பதை நாம் மறந்துவிட முடியாது. நாடு நெருக்கடியில் இருந்த போது நாட்டை மீட்டுக் கொடுத்துள்ளார். ஒவ்வொரு சமையல் அறைக்கும் கேஸ் சிலிண்டர் சென்றிருக்கிறது.

டி.எஸ். சேனாநாயக்கவின் காலத்தில் அதிகமான முஸ்லிம்கள் ஐ.தே.கவிலே இணைந்திருந்தனர். பின்னர் அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டது. கடந்த காலங்களில் தேசிய காங்கிரஸ் பல்வேறு அரசியல் தீர்மானங்களை எடுத்துள்ளது. சில சமயங்களில் இந்த ஜனாதிபதிக்கு எதிராகவும் முடிவுகளை எடுத்துள்ளது. ஆனால் இன்று அவருடன் நாட்டுக்காக இணைந்துள்ளோம்.நாட்டின் தற்போதைய  ஜனாதிபதி சாதாரணமான ஒருவரல்ல. யாரும் முன்வராத நிலையில் தாய் நாட்டைக் காப்பாற்ற வந்த தலைவர் அவர். முஸ்லிம் காங்கிரஸ் என்பது வெறும் முறையான அரசியல் கட்சிக்கு அப்பால் தனிநபர்களின் தேவைக்காக செயற்படுகிறது.

இன்றிருக்கும் தலைவர்களின் நாட்டைப் பற்றி முழுமையாக தெரிந்தவர் நமது ஜனாதிபதி. எதிர்காலத்திற்குக் கொண்டு செல்லக் கூடிய தலைவர் நாட்டுக்குத் தேவை. டி.எஸ். சோனாநாயக்கவிற்குப் பிறகு அனைத்து மக்களும் உங்களை நம்பியுள்ளனர். அனைவரது பிள்ளைகளையும் தமது பிள்ளைகளைப் போல அவர் காத்திருக்கிறார். நீங்கள் தான் இந்த நாட்டின் தந்தை" என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் தயா கமகே, தேசிய காங்கிரஸ் கொள்கை பரப்புச் செயலாளர் மர்ஷூம்  மௌலானா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி ஷிரியானி விஜேவிக்ரம உள்ளிட்டோரும் இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனோமா கமகே,  தேசிய காங்கிரஸ் முக்கியஸ்தர்கள்,பிரதேச அரசியல் தலைவர்கள் மற்றும் பெருந்திரளான மக்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி