பல தமிழ்த் தேசியக் கட்சிகள்

மற்றும் அமைப்புகளின் ஆதரவுடன் முன்னிறுத்தப்பட்டுள்ள வடக்கின் சுயேட்சை வேட்பாளர் முள்ளிவாய்க்கால் தமிழர் இனப்படுகொலை நினைவிடத்தில் தீபமேற்றி அஞ்சலி செலுத்தி, போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் பொதுக்கூட்டம் ஒன்றையும் நடத்தி ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்.

கடந்த (18) ஞாயிற்றுக்கிழமை தனது கன்னிப் பிரச்சார உரையை ஆற்றிய தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன், இதுவரை காலமும் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட எவரும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கவில்லை என்பதை சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எடுத்துக்காட்டவே தான் தேர்தலில் களமிறங்கியதாக வலியுறுத்தினார்.
 
“வடக்கு கிழக்கிலே இந்த இனப்பிரச்சினை இன்னும் தீரவில்லை. கடந்த எட்டு ஜனாதிபதிகளுக்கும் வாக்களித்திருக்கின்றோம். அந்த எட்டு ஜனாதிபதிகளாலும் நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம். இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏமாறுவதற்கு நாம் தயாரில்லை. எங்களுக்கான உரிமைப் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. ஆகவே அது தீர்க்கப்பட வேண்டும் என்ற விடயத்தை சர்வதேசத்திற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் காட்ட வேண்டும் என்ற நோக்கில்தான் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.”
 
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதின் நோக்கம் பதவி நாற்காலியில் அமர்வதல்ல எனவும் மாறாக தமிழ் மக்களின் உரிமை சார்ந்த பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படவில்லை என்பதை எடுத்துக்காட்டும் 'குறியீடே' தான் எனவும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
 
“நான் ஸ்ரீலங்கா சோசலிச ஜனநாயக குடியரசின் ஜனாதிபதியாக வருவதற்கு களமிறங்கவில்லை. மாறாக இழந்த ஈழ மக்களின் உரிமை பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்பதை காட்டும் அடையாளமே, குறியீடே நான்.”
 
வடக்கில் யுத்தத்தின் பின்னர், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பில் மூன்று ஜனாதிபதிகளுடன் கலந்துரையாடிய போதும் எவ்வித பலனும் ஏற்படவில்லை என்பதையும் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் நினைவுகூர்ந்திருந்தார்.
 
“இந்த நேரத்தில் தமிழ் மக்களின் ஒற்றுமை என்பது சர்வதேசத்தின் மனச்சாட்சியை தட்டும் வாய்ப்பாக இது அமையும். நாம் ஒற்றுமையாக இருக்கின்றோம். முள்ளிவாய்க்கால் போர் முடிவடைந்த பின்னர் நாங்கள் 15 வருடங்களாக உரிமையற்று இருக்கின்றோம். மூன்று ஜனாதிபதிகளுடன் பேசியிருக்கின்றோம். அவர்கள் எந்தத் தீர்வையும் தரவில்லை. ஆகவே உங்களுக்கு வாக்களிக்க நாம் தயாரில்லை. நாங்கள் நாங்களாகவே இந்த நாட்டில் இருக்க விரும்புகின்றோம். இணைந்த வடக்கு கிழக்கில் எங்கள் உரிமையை பெற வேண்டிய கடமை எமக்கு இருக்கிறது.”
 
இலங்கையில் அதிகாரத்திற்கு வந்த தெற்கில் உள்ள அனைத்து சிங்கள ஜனாதிபதிகளும் தமிழ் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வந்தமையே இம்முறை வடக்கு, கிழக்கிலிருந்து தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
 
“புலிகளின் காலத்தில் ஐந்து ஜனாதிபதிகளாலும், அதன் பின்னர் மூன்று ஜனாதிபதிகளாலும் ஏமாற்றாப்பட்டோம். அதன் விளைவுதான் இந்த பொது வேட்பாளர்.”
 
தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபட்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஒற்றையாட்சியில் நாட்டின் பெரும்பான்மையினருக்கு மாத்திரம் செயற்படும் அரச தலைவரைத் தெரிவு செய்யும் ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டுமென வலியுறுத்தி வடக்கு கிழக்கில் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றது.
 
பாக்கியசெல்வம் அரியநேத்திரன் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழ் அரசு கட்சி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இன்னும் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளிப்பப்படுத்தவில்லை.
 
OSOEPRI25
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி