மன்னார் தீவுப் பகுதியில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று இரவு முதல் முன்னெடுக்கப்பட்ட
போராட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
மன்னார் - மதவாச்சி பிரதான வீதியூடாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்களை மன்னார் நகருக்குள் கொண்டுவர எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மன்னாரில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பதற்றமான சூழலால் அப்பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர் என்று, அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன்னார் தீவு பகுதியில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தற்போது மன்னார் - மதவாச்சி பிரதான வீதியூடாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்களை மன்னார் நகருக்குள் கொண்டு வர எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மன்னாரில் நேற்றும் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளாரின் ஏற்பாட்டில் இரண்டாவது நாளாக நேற்றைய தினம் (05) போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த போராட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்கும் வகையில் மன்னார் நகர பகுதியில் உள்ள ஒரு சில உணவகங்களை தவிர அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டன. மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்லாது குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
மேலும் மன்னார் தீவுக்குள் இரண்டாம் கட்ட காற்றாலை திட்டங்களுக்கான மூலப் பொருட்கள் எதுவும் தீவு பகுதிக்கு கொண்டு வரக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரண்டாவது நாளாக நேற்று (5) இடம்பெற்ற அமைதி போராட்டத்தில் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார், அருட்தந்தையர்கள், பொது அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், மீனவ அமைப்புகள், வர்த்தகர்கள், பொதுமக்கள், இளைஞர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
மேலும் மன்னார் சௌத்பார் பகுதியில் உள்ள வீதிகள் நேற்று முன்தினம் (04) இரவு காற்றாலை மின் கோபுரங்களை கொண்டு வருவதற்கு ஏற்ற வகையில் திடீர் என புனரமைப்பு செய்யப்பட்ட நிலையில் மக்களின் எதிர்ப்பு காரணமாக குறித்த பணிகள் இடை நிறுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மன்னாரில் இரண்டாம் கட்ட காற்றாலை மின் உற்பத்தி வேலைத்திட்டம் தொடர்பில் அமைச்சர்கள் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலானது, எதிர்வரும் வியாழக்கிழமை (07) நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (5) நாடாளுமன்ற அமர்வின் போது அமைச்சர் பிமல் ரத்நாயக்க விடம் கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தேன். காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பது குறித்து மன்னார் மாவட்டத்தில் தற்போது போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
“எனவே மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்றை நடாத்து வதற்கும் ஜனாதிபதியை சந்தித்து குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாட வாய்ப்பை ஏற்படுத்தி தருமாறு அவரிடம் கோரி இருந்தேன். என்னுடன் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, அவர்களும் இணைந்து இதற்கு பொறுப்பான அமைச்சரை சந்தித்து உரையாடினோம்.
“குறித்த உரையாடலின் பலனாக எதிர்வரும் 7 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 11.30 மணிக்கு முக்கிய பிரதிநிதிகளுடன் அரசாங்க அதிபர் தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் குறித்த கூட்டம் இடம்பெற உள்ளது.ஜனாதிபதியும் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் உள்ளது. இந்த கலந்துரையாடல் இடம் பெறும் வரை எவ்வித நகர்வும் முன்னெடுக்கப்படாது என உரிய அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன்படி, குறித்த கூட்டத்தில் இறுதி முடிவை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன” என்றார்.